×

ஸ்டார்க் அபார பந்துவீச்சு நியூசிலாந்து திணறல்

பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில் (பகல்/இரவு), நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்து திணறி வருகிறது. பெர்த் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 248 ரன் எடுத்திருந்தது. வார்னர் 43, பர்ன்ஸ் 9, ஸ்மித் 43, மேத்யூ வேடு 12 ரன்னில் ஆட்டமிழந்தனர்.  மார்னஸ் லாபுஷேன் 110. ஹெட் 20 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர்.லாபுஷேன் 143 ரன் (240 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), ஹெட் 56 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த கேப்டன் டிம் பெய்ன் 39, கம்மின்ஸ் 20, ஸ்டார்க் 30, லயன் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன் குவித்து ஆல் அவுட்டானது (146.2 ஓவர்). நியூசிலாந்து பந்துவீச்சில் சவுத்தீ, வேக்னர் தலா 4, கிராண்ட்ஹோம், ராவல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. லாதம் 0, ராவல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் கேன் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 76 ரன் சேர்த்தது. ஸ்டார்க்கின் துல்லியமான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வில்லியம்சன் (34 ரன்), நிகோல்ஸ் (7 ரன்), வேக்னர் (0) ஆகியோர் அணிவகுத்தனர். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 109 ரன் எடுத்துள்ளது. டெய்லர் (66 ரன்), வாட்லிங் (0) களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க் 4, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 5 விக்கெட் இருக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் இன்னும் 307 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.


Tags : Stark Abara ,New Zealand , Stark , New Zealand
× RELATED 2வது டெஸ்டில் போராடி வெற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா