மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு 8 சதவீத மாணவர்கள் உணவு அருந்த வருகை: அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் தினசரி 8 சதவீத மாணவர்களும்,  தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10 சதவீதம் பேரும் உணவு அருந்துகின்றனர் என்ற தகவல் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதை தவிர்த்து முக்கிய மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள நகர் புறங்களிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்களில் காலை நேரங்களில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் உள்ளிட்ட பல வகை சாதங்களும், இரவில் சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன.

இந்நிலையில் ஜெயலிலதா மறைவுக்கு பிறகு அம்மா உணவகங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், அம்மா உணவகங்களில் இருந்து பலர் பார்சல் வாங்கி செல்வதாகவும், இதனால் பசியோடு வரும் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் திரும்பி செல்வதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி பார்சல் வழங்கினால் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும் அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாகவும் ஆய்வு செய்ய சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை ஆணையர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  

இந்த குழு சென்னை முழுவதும் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் உணவு அருந்துபவர்கள் தொடர்பாக 15 நாட்கள் ஆய்வு நடத்தியது. இதில் சாப்பிடுபவர்களின் விவரம், உணவின் தரம், மேம்பாடு செய்ய வேண்டிய நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துகள் சேகரிக்கப்பட்டது.இந்த ஆய்வில் மொத்தம் 5 லட்சத்து 38 ஆயிரத்து 379 பேரிடம் மேற்கண்ட கேள்விகள் கேட்கப்பட்டன. இவர்களில் 84 சதவீதம் ஆண்களும், 16 சதவீதம் பேர் பெண்களும் அம்மா உணவகத்தில் உணவு அருந்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அம்மா உணவகம் அருகில் உள்ள வீடுகளை சேர்ந்த 14 சதவீதத்தினர் மட்டுமே அம்மா உணவகத்தில் உணவு அருந்துகின்றனர் என்பதும் தெரிந்தது.

சென்னையில் வசிக்கும் 64 சதவீதத்தினரும், வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து தங்கி, வேலை செய்யும் 26 சதவீதம் பேரும் அம்மா உணவகத்தில் உணவு அருந்துவது தெரிந்தது. அதிகபட்சமாக கட்டிட தொழிலாளர்கள் 24 சதவீதத்தினர் இங்கு உணவு அருந்துகின்றனர். அதற்கு அடுத்தபடியாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 10 சதவீதத்தினரும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 சதவீதத்தினரும், 5 சதவீத எலக்ட்ரீசியன்களும், 4 சதவீத பிளம்பர்களுக்கும், 5 சதவீத ஆட்டோ ஓட்டுனர்களும் அம்மா உணவகங்களில் உணவு அருந்துவது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்களை நடத்தவும், மேம்படுத்தவும் ஒரு டிரஸ்ட் அல்லது நிதியை உருவாக்குதல், பெரிய நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை திரட்டுதல், அம்மா உணவகத்தை தத்தெடுத்தல், ஒருங்கிணைந்த சமையல்கூடம் அமைத்தல் உள்ளிட்ட 5 திட்டங்களை இந்த குழு பரிந்துரை செய்தது. இந்த அறிக்கை மற்றும் அம்மா உணவகத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தலைமை செயலாளர் நடத்திய ஆய்வு கூட்டத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக முதல்வரின் அனுமதி பெற அறிக்கை சமர்பிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

சட்னி வேண்டும்

அம்மா உணவகத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, இட்லிக்கு சட்னி வழங்க வேண்டும். மதியம் வழங்கும் பல்வகை சாதத்திற்கு ஊறுகாய் வழங்க வேண்டும், வெஜ் பிரியாணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: