போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்: 34வது இடத்தை பிடித்தார்

நியூயார்க்: உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவைச் சேர்ந்த ரோஷினி நாடார் மல்கோத்ரா, மசூம்தர் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் ஆண்டுதோறும் அரசியல், தொழில்துறை, ஊடகங்கள் மற்றும் சமூக பணியில் உயர் பொறுப்பில் உள்ள சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். தற்போது அது வெளியிட்டுள்ள இந்தாண்டுக்கான பட்டியலில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 34வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சரான இவர், போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதல் முறை.

எச்சிஎல் நிறுவனத்தின் சிஇஓ.வான இந்தியாவைச் சேர்ந்த ரோஷினி நாடார் மல்கோத்ரா 54வது இடத்தையும், தனது சுய முயற்சியால் இந்தியாவின் பணக்கார பெண்மணியான பயோகான் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் மசூம்தர் ஷா 65வது இடத்தையும் பெற்றுள்ளனர்.உலகின் மிகுந்த சக்தி வாய்ந்த பெண்ணாக நம்பர்-1 இடத்தை பிடித்திருப்பவர் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல். இவர் 9வது முறையாக நம்பர்-1 இடத்தை பிடித்துள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் 2வது இடத்தையும், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி 3வது இடத்திலும் உள்ளனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29வது இடத்தை பிடித்துள்ளார்.

தலைவர்களை அசத்திய சிறுமிக்கு 100வது இடம்

போர்ப்ஸ் இதழின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் மனைவி மெலின்டா கேட்ஸ் 6, ஐபிஎம் சிஇஓ ஜின்னி ரோமெட்டி 9, பேஸ்புக் சிஓஓ ஷெரில் சாண்ட்பெர்க் 18, நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டெர்ன் 38, அமெரிக்காவின் முதல் மகளும், அதிபர் டிரம்ப்பின் ஆலோசகருமான இவாங்கா டிரம்ப் 42வது இடத்தை பிடித்துள்ளனர்.  பிற பிரபலங்களான பாப் பாடகி ரிஹன்னா 61, டெய்லர் ஸ்விட் 71, டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 81வது இடத்தை பெற்றுள்ளனர்.  சமீபத்தில் ஐநா பொதுச்சபையில் தனது பேச்சால் உலக தலைவர்களை அசத்திய இளம் பருவநிலை ஆர்வலர் கிரேடா துன்பெர்க் என்ற சிறுமி, புதுமுகமாக 100வது இடத்தை பெற்றுள்ளார்.

Related Stories: