திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே பரபரப்பு: மினி லாரி முன் நமஸ்கரித்தபடி பக்தர் தற்கொலை: பாவமே சேரும் என ரமண தீட்சிதர் எச்சரிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் எதிரே மினிலாரி முன் பக்தர் ஒருவர் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தபடி திடீரென பின்சக்கரத்தின் அடியில் பாய்ந்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். இதற்காக தேவஸ்தான கோசாலையில் இருந்து கேன்களில் மினி லாரியில் பசும்பால் கொண்டு வரப்படும். அதன்படி, நேற்று காலை பால் கொண்டு வரப்பட்டது. அபிஷேகத்திற்கு பின்னர் அந்த காலி கேன்களை ஏற்றிக் கொண்டு லாரி புறப்பட்டது. கோயிலுக்கு எதிரே சென்றபோது அங்கிருந்த  சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தபடி திடீரென லாரியின் பின்சக்கரத்தின் மத்தியில் படுத்துக் கொண்டார். அப்போது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜிலன்ஸ் அதிகாரிகள் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடனே அவர் லாரியின் அடியில் படுத்துக் கொண்டது தெரியவந்தது. ஆனால் அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. தமிழகத்தை சேர்ந்தவரா என்ற சந்தேகத்தில் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன் பக்தர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தேவஸ்தான ஆகம  ஆலோசகர் ரமண தீட்சிதர் கூறியதாவது: திருமலையில்  உயிர் இழந்தால் மோட்சம் கிடைக்கும் என பக்தர்கள்  பலர் மூடநம்பிக்கையில் உள்ளனர். இந்த இடத்தில்  தற்கொலை செய்துகொள்வது மிகவும் பாவச்செயல். இங்கு இயற்கையாக உயிர் இழந்தால் அது வைகுண்ட மோட்சம். ஆனால் தானாக உயிரை மாய்த்து  தற்கொலை செய்தால் பாவத்தையே சேர்க்கும். இது போன்ற மூடநம்பிக்கைகளை யாரும் நம்பாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: