சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய அலங்கார கண்ணாடியில் விரிசல்: பயணிகள் அச்சம்,.. நிர்வாகம் அலட்சியம்

சென்னை: சென்னையில் 45.1 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நீர்க்கசிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பல மெட்ரோ ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள அலங்கார கண்ணாடிகள் திடீர் திடீரென உடைந்து சேதமடைந்து வருகின்றன.  அதன்படி, நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் கவுன்டர் அருகில் இருந்த மிகப்பெரிய அலங்கார கண்ணாடியில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை பார்த்த பயணிகள் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அலங்கார கண்ணாடியை ஆய்வு செய்த ஊழியர்கள், எப்போது வேண்டுமானாலும் இது உடையலாம் என்று தலைமை அலுவலகத்திற்கு தகவல் அனுப்பினர்.

ஆனால், இதை உடனடியாக சரிசெய்ய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கண்ணாடி சேதமடைந்த நிலையிலேயே உள்ளது. சுரங்கப்பாதையில் ஏற்படும் அதிர்வு காரணமாக கண்ணாடி சேதம் அடைந்ததா அல்லது தரமற்ற கண்ணாடி என்பதால் உடைந்ததா என்பதை பரிசோதிக்க சிறப்பு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  ஏற்கனவே, நேரு பூங்கா, ஷெனாய் நகர், அண்ணாநகர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள அலங்கார கண்ணாடிகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, பெரும் விபத்து ஏற்படும் முன்பாக அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள அலங்கார கண்ணாடிகளை சோதனை செய்ய நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: