பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த கிருஷ்ணகிரி ராணுவ வீரர் உடல் 42 குண்டுகள் முழங்க அடக்கம்

கிருஷ்ணகிரி: அருணாசலபிரேதசத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அருணாச்சல பிரேதச பகுதியில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 வீரர்கள் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் வாகனம் சிக்கி அதிலிருந்த இந்திய ராணுவ வீரர்கள் 4 பேர்கள் உயிரிழந்தனர். இறந்த 4 பேரில் ஒருவர் தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், திப்பனபள்ளி ஊராட்சிக்குட்பட்ட கும்மனூர் பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் சந்தோஷ் (24) என்பது தெரிய வந்தது.

இவர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்-சாப்பர் பிரிவில் பணியாற்றி வந்தார். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் கிருஷ்ணகிரி மாவட்டம், கும்மனூருக்கு  கொண்டு வரப்பட்டது. நேற்று மதியம், பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் ஜேசிஓ சின்ராஜ், தலைமையில் 24 வீரர்கள் அடங்கிய குழுவினர் 42  துப்பாக்கி குண்டுகள் முழங்க சந்தோஷ் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், ராணுவ வீரர் சந்தோஷ் பெற்றோர் நடராஜன், சித்ரா மற்றும் சகோதரிகள் கோகிலா, சவுந்தர்யா மற்றும் உறவினர்களுக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார். இதில் டி.எஸ்.பி சக்திவேல், முன்னாள் படை வீரர் உதவி இயக்குநர் பிரேமா, தாசில்தார் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: