கட்டாய திருமணத்தால் அதிர்ச்சி: தாலியை கழற்றி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்ற மாணவி

வேலூர்: கட்டாய திருமணத்தால் அதிர்ச்சி அடைந்த 13 வயது மாணவி, தாலியை கழற்றி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றார். இதையறிந்த சமூக நல அதிகாரிகள் மாணவியை மீட்டனர். மேலும் இருதரப்பு பெற்றோர், மாப்பிள்ளை மீது போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேபகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் அக்காவிற்கு உறவினரை திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதற்கென சித்தூரில் உள்ள உறவினரை பெண் பார்க்க வருமாறு அழைத்தனர். முன்னதாக இருவரது ஜாதக பொருத்தம் எப்படி உள்ளது என்று மாணவியின் பெற்றோர் ஜோசியரிடம் கேட்க சென்றனர். அவர், மூத்த மகளுக்கு ஜாதகம் சரியில்லை. இளைய மகளுக்கு இந்த வரன் பொருத்தமாக இருக்கும் என்றாராம்.

இதையடுத்து மாணவியை பெற்றோர் சித்தூரில் இருந்து வந்த உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனையறிந்த மாணவி, தான் படிக்க விரும்புவதாக கூறினார். அதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி சித்தூர் அழைத்துச் சென்று கடந்த 6ம் தேதி கடப்பகுண்டாவில் உள்ள வீட்டில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து வைத்தனர். திருமணம் முடிந்து கடந்த 8ம்தேதி மாணவி, மற்றும் அவரை திருமணம் செய்து கொண்ட வாலிபர் காட்பாடிக்கு வந்தனர். தனது வீட்டுக்கு வந்த மாணவி, கழுத்தில் அணிந்திருந்த தாலியை ரகசியமாக கழற்றி வைத்துவிட்டு பள்ளிக்கு சென்றாராம்.

இந்நிலையில் இதுகுறித்த தகவல் அறிந்த குழந்தைகள் நல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன் மற்றும் விருதம்பட்டு போலீசார், மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அதில், மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்தது உறுதியானது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாணவியை கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து மாணவியை அழைத்துச் சென்ற அதிகாரிகள் அப்துல்லாபுரத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர்.

மாணவிக்கு கட்டாய திருமணம் செய்த இருதரப்பு பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை மீது வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, வேலூர் எஸ்பிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். அதன்பேரில் விசாரணை நடைபெற உள்ளது. பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: