குமரியில் கொண்டாட்டம் களை கட்டியது: வீடுகளை அலங்கரிக்கும் கிறிஸ்துமஸ் ஸ்டார்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை களை கட்டி உள்ளன. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை களை கட்ட தொடங்கி உள்ளன. வீடுகள் தோறும் கண்ணைக் கவரும் நட்சத்திரங்கள், வண்ண வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் குடில்கள், கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலம், கேரல் எனப்படும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துப் பாடல்கள் என்று கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன.

இதேபோல் மாவட்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்கள் சார்பிலும் அதற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து பாடல் பாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் விழாவின் பிரதான அடையாளமான கிறிஸ்துமஸ் குடில் அமைப்பதை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். குறிப்பாக பொது இடங்களில், ஆலய வளாகங்களில் அதிக பொருட்செலவில் பிரமாண்டமான கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இது தவிர வீடுகளில் சிறு அளவிலான குடில்கள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். இதற்குத் தேவையான தருவைப் புற்களை மலையோரப் பகுதிகள் மற்றும் கால்வாய் கரையோரங்களுக்குச் சென்று இளைஞர்கள் சேகரித்து வருகின்றனர். அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை, பரிசு பொருட்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்க விடுவார்கள். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 11 நாட்களே உள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உற்சாகமாக  நடந்து வருகின்றன. நாகர்கோவில், மார்த்தாண்டம், கருங்கல், புதுக்கடை, தக்கலை, அருமனை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா ஏற்பாடுகள் ஜொலிக்க தொடங்கி உள்ளன.

இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் வீடுகளில் ஸ்டார்கள் தொங்க விடப்படும். இதற்காக பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நாகர்கோவிலில் மணிமேடை பகுதி, டதி ஸ்கூல் சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்பட பல்வேறு இடங்களில் பலவிதமான ஸ்டார்கள் மும்முரமாக விற்பனையாகிறது. குடில் அமைக்கும் பொருட்களும் இந்த ஆண்டு பல வித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தொடங்கி உள்ளன. புத்தாடைகள் வாங்க பொதுமக்கள் ஜவுளி கடைகளுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். டிசம்பர் மாதம் பிறந்ததில் இருந்து, கொண்டாட்டத்துக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக ஆலயங்கள் புதுப்பிப்பு பணிகளும் நடக்கின்றன. வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் என தேவாலயங்கள் ஜொலிக்க தொடங்கி உள்ளன.

Related Stories: