பாஸ்போர்ட், பட்டாவுக்கு கூட வந்து விட்டது: ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் வசதி அமலாகுமா?

திருச்சி: அரசு துறைகளில் கைகளால் எழுதிக்கொண்டிருந்த பல பணிகள் இப்போது ஆன்லைன் மயமாகி விட்டன. தமிழகத்தில் சாதி, வருமானம், வசிப்பிடம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் கடந்த 2002ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. இ சேவை மையங்களில் விண்ணப்பித்தால், 3 அல்லது 4 நாள் கழித்து அதே மையத்தில் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் . அதேபோல் 2003 முதல் நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் செய்யும் பணியும் இணையம் மூலம் நடைபெறுகிறது. இதுதவிர பாஸ்போர்ட், பஸ், ரயில் கட்டணம், மின் கட்டணம் செலுத்தும் வசதி கூட ஆன்லைனில் நடைபெறுகிறது. ஒரு ஸ்மார்ட் செல்போன் இருந்தால், அதை வைத்து எல்லா பணிகளையும் செய்து விடலாம் என்ற நிலைக்கு அறிவியல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது.

அந்த வரிசையில் தேர்தலுக்காக வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுவையும் ஆன்லைனில் தாக்கல் செய்யும் வசதி கொண்டு வந்து விட்டால் சிறப்பாக இருக்கும். போலீசாரின் பாதுகாப்பு தேவை இல்லை, வேட்பாளர்கள், அலுவலர்களின் நேரமும் மிச்சமாகும்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர் தன்னுடன் 100க்கும் மேற்பட்டோரை ஊர்வலமாக அழைத்து செல்வார். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் இதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மனுவை வாங்க காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை காத்திருக்க வேண்டும். இதையெல்லாம் தவிர்க்க ஆன்லைனில் வேட்பு மனு தாக்கல் செய்யும் வசதி வந்தால் நல்லது தான்.

குறிப்பிட்ட காலத்துக்குள் ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிடலாம். ஒரு நாள் விண்ணப்பம் அளித்தவர்களை அழைத்து அவர்கள் முன்னிலையிலேயே விண்ணப்பங்களை ஆய்வு செய்யலாம். இது நல்ல திட்டமாக இருக்கும். இப்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. வர இருக்கும் தேர்தலுக்காகவது இந்த திட்டத்தை அமல்படுத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். இதனால் வேட்பாளர்களுக்கு செலவும் மிச்சமாகும் என்றனர்.

தமிழக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது, தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் உள்ளனர். இதில்,  தேர்தல் பணிக்கு மட்டும் சுமார் 70,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள். வேட்புமனு தாக்கல் ஆன்லைனில் செய்யும் வசதி வந்து விட்டால், எங்களுக்கு பணிச்சுமை குறையும் என்றனர்.

Related Stories:

>