அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு : 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு

மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக் கிளை ஆணையிட்டுள்ளது. 750 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

தமிழக பால்வளத் துறை அமைச்சராக இருப்பவர் ராஜேந்திர பாலாஜி. 2014-ஆம் ஆண்டில் இவர் மீது மகேந்திரன் என்பவர் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் அளித்த புகாரின்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேவதானத்தில் 74 லட்ச ரூபாய்க்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். ஆனால், இதன் உண்மையான மதிப்பு 6 கோடியாகும். அவர் இதுமட்டுமின்றி திருத்தங்கலில் குறைந்த விலையில், வீட்டு மனை மற்றும் நிலம் வாங்கியுள்ளார். அதன் மதிப்புகள் சந்தை நிலவரப்படி 1 கோடியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், அதன் மீதான விசாரணை அதன் பிறகு நடைபெறவில்லை. அதனால், மகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ராஜந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை எஸ்பி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.அந்த உத்தரவில் ராஜேந்திர பாலாஜி 1996-ஆம் ஆண்டு திருத்தங்கல் ஊராட்சி துணை தலைவராக இருந்த போது முதல் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அறிக்கை தாக்கல்  செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது

அதைத் தொடர்ந்து அவ்வப்போது விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜூலை 25-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளது. அமைச்சரிடமும் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை மாநில கண்காணிப்பு கமிட்டிக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர்கள்தான் இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டும் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறைந்த சதவீத அளவிலேயே அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சொத்து அதிகரித்துள்ளது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதற்கட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் ஏன் அடுத்தக்கட்ட விசாரணையை தொடரக்கூடாது? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் 750 பக்கங்கள் கொண்ட அறிக்கையை எப்படி படித்து முடித்து உத்தரவிட முடியும்? என்றும் இதே அவசரம் அனைத்து வழக்குகளிலும் இருக்குமா என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து  750 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: