குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே என் மீது குற்றம்சாட்டுகிறார்கள்: ராகுல் காந்தி

டெல்லி: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறையை மறைக்கவே தன் மீது பாரதிய ஜனதா கவனத்தை திசை திரும்புவதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேக் இன் இந்தியா என்று  பிரதமர் கூறும் நிலையில் பெண்கள் பாலியல் கொடுமை தான் நடக்கிறது என்று கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று தெரிவித்தார். டெல்லியை பாலியல் வன்கொடுமையின் தலைமை என பிரதமர் மோடி பேசிய வீடியோ தமது செல்போனில் இருப்பதாக கூறிய அவர், அதை அனைவரும் காண ட்விட்டரில் பகிர போவதாகவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் வன்முறைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பாரதிய ஜனதா இதை பிரச்சனை ஆக்குவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேக் இன் இந்தியாவும்,பாலியல் வன்கொடுமையும்: ராகுலின் சர்ச்சை பேச்சு

மேக் இன் இந்தியா திட்டத்தை  பெண்கள் பாலியல் வன்கொடுமையுடம் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது நாடாளுமன்றத்தில் சர்ச்சையை கிளப்பியது. சட்டப்பேரவை தேர்தல் நடந்துவரும் ஜார்கண்டில் காங்கிரஸ் பரப்புரை கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். மேக் இன் இந்தியா என பிரதமர் கூறிவரும் நிலையில் எங்கு பார்த்தாலும் இப்போது இந்தியாவில் பாலியல் வன்கொடுமை தான் நடப்பதாக ராகுல் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அறிவித்தார் என்றும், ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை ரேப் இன் இந்தியா திட்டமாக மோடி மாற்றி விட்டார் என்று விமர்சித்திருந்தார்.

நாட்டில் எங்கு சென்றாலும் பாலியல் பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக பெண் எம்பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பினர். இந்தியாவை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசிவிட்டதாக பெண் எம்பிக்கள் தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். பாஜக பெண் எம்பிக்கள் அமளியை தொடர்ந்ததால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: