ஜப்பான் தொழில்நுட்ப முறையில் மாநகராட்சியில் உருவாகும் ‘அடர்காடு’

* குளுகுளு காற்று கிடைக்கும்

*பறவைகள் படையெடுக்கும்

மதுரை : பூமியில் வெப்பம் குறைதல் உள்பட பல்வேறு பயன்கள் கிடைக்கக்கூடிய  அடர்காடுகளை மதுரை மாநகராட்சி வளர்த்து வருகிறது.  ஜப்பான் நாட்டை சேர்ந்த அகிரா மியாவாக்கி என்பவர் மரங்களை அதிவேகமாக வளரும் முறையை கண்டுபிடித்தார். அந்த வகையில் இடைவெளி இல்லாமல் அடர்ந்த காடுகளை வளர்த்தார். அதாவது குறைந்த இடத்தில் அதிகளவில் மரங்களை வளர்த்தல் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் மரங்கள் அடர்த்தியாக வளர்க்கப்பட்டதால் பயன்களும் கிடைத்தது. கோவையிலும் அடர் காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனை பின்பற்றி மதுரை மாநகராட்சி சார்பில் மியாவாக்கி எனும் முறையில் அடர்ந்த காடுகளை வளர்க்க திட்டமிடப்பட்டது. அவ்வகையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் உத்தரவின்பேரில், அடர்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.  மதுரை அவுட்போஸ்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பூங்கா, கமிஷனர் பங்களா, மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகம் ஆகிய இடங்களில் குறைந்த பரப்பளவில் 100 மரங்கள் நடப்பட்டன. புங்கை, நாவல், மருதம் உள்பட 30 வகை மரங்கள் மிகவும் நெருக்கமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

 இந்த மரங்கள் அடர்ந்த காடுகளாக வளர்ந்த பின்னர் அப்பகுதி பூமியில் வெப்பம் குறைந்து விடும். காற்றின் ஈரப்பதம் தக்க வைக்கப்படும். குட்டி வனத்துக்குள் பறவைகள், புழு, பூச்சிகள், தேனீக்கள் அதிகளவு வாழும். இதனால் உயிர்ச்சூழல் மேம்படும். கடற்கரை பகுதிகளில் இந்த காடுகளை வளர்த்தால் சுனாமியால் ஏற்படும் பேரிழப்பு தடுக்கப்படும்.   இது குறித்து மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறும்போது, ‘‘மதுரை மாநகராட்சி பகுதியில் மேலும் 23 இடங்களில் அடர்காடுகள் வளர்க்க இருக்கிறோம். இது தவிர 41 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதை ஒட்டிய இடங்களிலும் அடர் காடுகள் வளர்க்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த அடர் காடுகள் வளர்ப்பு முறையால், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதி எப்போதும் குளர்ச்சியாக இருக்கும். கோடை காலங்களிலும் வெப்பம் தெரியாது. இதுதவிர மரங்களால் கிடைக்கும்  பல்வேறு பயன்களையும் பெறலாம்’ என்றார்.

Related Stories: