×

வாணியம்பாடியில் பல்வேறு பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் மணல் கொள்ளை படுஜோர்

*கண்டுகொள்ளாத அதிகாரிகள்

வாணியம்பாடி :  வாணியம்பாடி பாலாற்றில் பல்வேறு பகுதிகளில் ராட்சத கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து பைப் பொருத்தப்பட்டு திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம்  செய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், பாலாற்று படுகைகளில் பல இடங்களில் விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலங்களை மணல் மாப்பியாக்கள் விவசாயிகளிடமிருந்து வாங்கி அங்கு தற்போது இரவு நேரத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் எடுக்கப்பட்ட மணலை டிப்பர் லாரி, டிராக்டர், மினி லாரி மற்றும் மாட்டு வண்டிகளில் ஏற்றி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

   இதேபோல், வாணியம்பாடி அருகே சி.என் புதூர், சின்ன மோட்டூர் பகுதியில்  உள்ள கானாறு மற்றும் தனியார் நிலங்கள், உதயேந்திரம் பாலாற்றுப்பகுதி, ஒடப்பேரி, பழைய வாணியம்பாடி ேபான்ற பகுதிகளில் இரவு, பகலாக அதிகளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு, அதனை அருகில் உள்ள தனியார் நிலங்களில் பதுக்கி வைத்து, இரவு நேரத்தில் லாரிகள் மூலம் வெளி மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. மேலும், வாணியம்பாடி கச்சேரி சாலை, கிரிசமுத்திரம், வளையாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள சில தனியார் நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களில் உள்ள மணலை, பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டதன் விளைவாக தாங்களே முன்வந்து, ஏற்கனவே கொள்ளையடித்து வரும்  மணல் மாப்பியாக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால், நில உரிமையாளர்கள் முன்னிலையில் அவரது நிலங்களில் உள்ள  மணலை தைரியமாகவே டிப்பர் லாரி மூலமாக கடத்துகின்றனர். மேலும்,  மணல் எடுக்கும் இடங்களில் பகலில் ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தி விட்டு, இரவு நேரங்களில் அங்குள்ள மணலை கொள்ளையடித்து வருகின்றனர். மேலும், ஜேசிபி மூலம் சேகரித்து வைத்துள்ள கட்டிட கழிவுகள், பல்வேறு குப்பைக்கழிவுகளை மணல் எடுத்துள்ள குழிகளில் போட்டு சமன் செய்து நிரப்பி வருகின்றனர். சொந்த நிலமாகவே இருந்தாலும், பூமிக்கடியில் 3 அடிக்கு கீழ் உள்ள கனிம வளங்கள் அரசுக்கு சொந்தமானது என கனிம வளத்துறை விதிகள் கூறுகின்றன. ஆனால், இங்கே, 20 அடிக்கு மேல் ஆழம் தோண்டப்பட்டு மணல் கொள்ளை அடிக்கின்றனர். இதனை அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் வேதனையளிக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Tags : lands ,Vaniyambadi ,vaniyampadi ,land , vaniyampadi ,private land,Sand Robbery,officials
× RELATED வாணியம்பாடியில் பணப்பட்டுவாடா!:...