நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் 18ம் ஆண்டு நினைவு நாள்: உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

டெல்லி: நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் 18ம் ஆண்டு நினைவு நாளையொட்டி தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமத் தீவிரவாதிகள் 5 பேர் இயந்திர துப்பாக்கிகளுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்து வரிசையாக அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பின்னர், நாடாளுமன்றத்திற்கு ஊடுருவ முயன்றனர். இதையடுத்து, அங்கிருந்த காவல்துறையினரும், நாடாளுமன்ற பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தியதில் தீவிரவாதிகள் ஐந்து பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் டெல்லி காவல்துறையினர் 5 பேர், மத்திய ரிசர்வ் காவல்படை பெண் காவலர், நாடாளுமன்ற பாதுகாவலர்கள் இருவர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் 18 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.

இதனை தொடர்ந்து, வீரமரணம் அடைந்தவர்களின் புகைப்படங்கள் நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடி மற்றும் முன்னாள்  பிரதமர் மன்மோகன் சிங்  உள்ளிட்ட பலரும் உயிரிழந்த வீரர்களின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தனர். கடந்த 2001 தாக்குதலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. தற்போது மத்திய ரிசர்வ் போலீஸ், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படை, சிறப்பு பாதுகாப்புபடை, தேசிய பாதுகாப்புபடை, டெல்லி போலீஸ் மற்றும் உளவு பிரிவு ஆகியவை ஒருங்கிணைந்து நாடாளுமன்றத்திற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றன.

Related Stories: