×

உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை : தீர்ப்பு குறித்து திமுக எழுப்பிய சந்தேகத்திற்கு உச்சநீதிமன்றம் பதில்

டெல்லி : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்  சில சந்தேகங்கள் உள்ளதாக கூறி திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீடு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு


ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை,  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் வழங்கினர்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்

அதில் “தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும்.இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது புதிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்க வேண்டும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில், புதிய மாவட்டங்களுக்கு முன்னதாக 4 மாதம் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தலுக்கு தடையில்லை


இந்த நிலையில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் irrespective என்ற ஒரு வார்த்தை உள்ளது குறித்து திமுக சந்தேகம் எழுப்பி வந்தது. மறைமுகமாக உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதித்துள்ளது என்றும் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு மறுவரை செய்த பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஊடங்கங்கள் முன்பு திமுக தெரிவித்து வந்தது. இந்நிலையில்  இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற ஒரு முறையீட்டை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் திமுக வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி இன்று முன் வைத்தார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, திமுக ஊடகங்களில் உச்சநீதிமன்றம் தேர்தலை நிறுத்திவிட்டது என்று கூறி வருவதாக வாதிட்டார்.  இதை கேட்ட நீதிபதி, முறையீட்டை விசாரிக்கவும் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிடவும் நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார். இதன் மூலம் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.


Tags : elections ,Supreme Court ,DMK ,respondents , Local Elections, Directives, Nominations, Ward Redefining, Notification, DMC, Supreme Court, Permit, Districts
× RELATED ஒப்புகைச்சீட்டை வாக்காளர்கள் எடுத்து...