விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் ரேசன் கடையில் பலநாள் இருப்பு அரிசி விநியோகம்

விருதுநகர் : விருதுநகர் அருகே ரேசன் கடையில் கார்டுதாரர்களுக்கு பல நாட்கள் இருப்பில் இருந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கார்டுதாரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் அழகாபுரி ரோட்டில் செங்குன்றாபுரம் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் செங்குன்றாபுரம், சமத்துவபுரம், சொக்கம்பட்டி ஆகிய 3 ரேசன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு ஒரே ஒரு பெண் விற்பனையாளர் பணியில் உள்ளார். நேற்று முன்தினம் மாலை செங்குன்றாபுரம் ரேசன் கடையில் கார்டுதாரர்களுக்கு அரிசி விநியோகம் செய்யப்பட்டது. நிறம் குறைந்த அரிசி விநியோகம் செய்யப்பட்டதால் கார்டுதாரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரேசன் கடை விற்பனையாளரிடம் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கிராம மக்கள் கூறுகையில், கிராம மக்களின் வாழ்வாதாரம் ரேசன் அரிசியை நம்பி இருக்கிறது. தற்போது புழுங்கல் அரிசி இருவிதமாக வழங்குகின்றனர். கேட்டால் இருப்பில் உள்ள மூடைகளை காலி செய்வதாக கூறுகின்றனர்.

சங்க தலைவர் பாலமுருகன் கூறுகையில், ரேசன்கடை பெண் விற்பனையாளர் மூன்று கடைகளை பார்த்து வருகிறார். அரிசி லோடு வரும் போது ஒவ்வொரு முறையும் பழைய அரிசியின் மீது இறக்கி சென்று விடுகின்றனர். இரு மாதங்களுக்கு முன் இறக்கப்பட்ட அரிசியை காலி செய்ய வேண்டிய கட்டாயத்தால் 12 கிலோ கார்டுதாரர்களுக்கு 8 கிலோ புது அரிசி, 4 கிலோ பழைய அரிசியை தனித்தனியாக வழங்குவதாக தெரிவித்தார்.

Related Stories: