ஊரக உள்ளாட்சி தேர்தல் சேர்மன் பதவிக்கு அதிமுகவில் பேரம்?

*மாவட்டச் செயலாளர்களை ‘குளிர’ வைக்க தயாராகும் முக்கிய புள்ளிகள்  

மதுரை : மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் யூனியன் சேர்மன் பதவிக்காக தங்களை சிபாரிசு செய்யக் கோரி மாவட்ட செயலாளர்களிடம் அதிமுகவினர் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி, ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவி ஆகியவற்றிற்கு மட்டும் பொது சின்னத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இது அரசியல் சார்பு இல்லாமல் நடைபெறும்.

ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு பதவிகளுக்கு அரசியல் கட்சிகளின் சின்னத்தில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரண்டு பதவிகளுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் மொத்தம் 214 கவுன்சிலர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் 13 முதல் அதிகபட்சம் 16 பேர் வரை கவுன்சிலராக இருப்பார்கள். இதில் ஒருவர் ஒன்றியத்தின் சேர்மனாக மறைமுக தேர்தல் மூலம் நியமிக்கப்பட வேண்டும்.

ஆளுங்கட்சியினர் இப்பதவிகளில் போட்டியிட மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளனர். இதுவரை அதிமுகவில் இந்த பதவிக்கு யார் வேட்பாளர்கள் என முறையாக அறிவிக்கவில்லை. ஆனால் அதிமுகவினர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக கட்சி பெயரை கூறி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் கட்சி வேட்பாளர் என்பதற்கான கட்சியின் பொதுச்செயலாளரின் பரிந்துரை கடிதம் யாருக்கு வழங்கப்படுகிறதோ அவர்தான் அதிகாரபூர்வமான கட்சி வேட்பாளர்.

ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறைந்தபட்சம் 34 கிராம ஊராட்சிகள் இருப்பதால், கிராம பகுதியில் நடைபெறும் பணிகளுக்கு டெண்டர் கிடைக்கும். அதிக அளவில் கமிஷன் பெறலாம்.

இதனால் ஆண்டுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கும். மேலும் சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தல் என்பதால், யாரை ஆதரிக்கிறோமோ அவரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற முடியும். மேலும் காண்ட்ராக்ட் கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மேலும், சேர்மன் ஆனால் ஒன்றியத்தில் நடைபெறும் ஒவ்வொரு டெண்டர் பணிக்கும் கமிஷனும் பார்க்கலாம். இதனால் சேர்மன் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என அதிமுகவினர் மாவட்ட செயலாளர்களிடம் மன்றாடி வருகின்றனர். இதில் சிலர் மறைமுகமாக மாவட்ட செயலாளர்களுடன் பெரும் தொகை தருவதாகவும் பேரம் பேசி வருவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories: