வேலூர் மாநகராட்சிக்கு சமீபத்தில் வாங்கப்பட்டது மாடுகள் கொண்டு செல்லும் லாரியின் ஹைட்ராலிக் இயந்திரம் பழுது

வேலூர் : வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கொண்டு செல்ல உதவும் லாரியின் ஹைட்ராலிக் இயந்திரம் பழுதானதால் மாடுகளை பிடிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்களை விரட்டிச் சென்று முட்டித்தள்ளுகிறது. அதேபோல், சாலையின் நடுவே படுத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பாதுகாப்பாக கொண்டு செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடிய லாரி மாநகராட்சி சார்பில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பொது இடம் மற்றும் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு லாரியின் பின்பக்கத்தில் உள்ள ஹைட்ராலிக் ஏணியில் நிறுத்தப்படும். பின்னர், இயந்திரத்தின் உதவியுடன் லாரியில் ஏற்றப்படும்.

இதுபோன்று சுமார் 12 மாடுகளை கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லாரி ஒன்று மட்டுமே உள்ளதால் மாநகராட்சியின் 4 மண்டலங்களுக்கும் சுழற்சி முறையில் மாடுகளை பிடிக்க பயன்படுத்தப்படுகிறது. இதுவரை சாலையில் சுற்றித்திரிந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகள் பிடிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், மாடுகளை பிடித்து கொண்டு செல்ல உதவும் லாரியின் ஹைட்ராலிக் இயந்திரம் நேற்று முன்தினம் திடீரென்று பழுதானது. இதையடுத்து பணியாளர்கள் லாரியை மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் மாடுகளை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘லாரியின் பழுதாகி உள்ள ஹைட்ராலிக் இயந்திரத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை தொடர்ந்து பிடித்து பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Stories: