கண்மாய் மடை சீரமைக்காததால் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

*காளையார்கோவில் அருகே பரபரப்பு

சிவகங்கை  : காளையார்கோவில் அருகே ஆனைமாவளி கண்மாய் மடை சீரமைக்காததால் பயிர்கள் பாதிக்கப்படுதாக கூறி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக கிராமமக்கள் அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காளையார்கோவில் ஒன்றியம் சூரக்குளம்புதுக்கோட்டை ஊராட்சியின் உள்ளது ஆனைமாவளி கிராமம். இங்கு சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். முழுவதும் விவசாயத்தை மட்டமே நம்பியுள்ள இக்கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்யாததால் விவசாயம் பொய்த்து போனது.

இந்நிலையில் இந்த ஆண்டு கிராமத்தினர் சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்தனர். இப்பகுதியில் தொடர் மழையால் இக்கிராமத்தில் உள்ள கண்மாயில் நீர் நிறைந்துள்ளது. ஆனால் கண்மாயில் உள்ள நீரை பாய்ச்ச சென்ற கிராமத்தினர் மடை பழுதால் அதிர்ச்சியடைந்தனர். மடை முழுவதும் அடைப்பு ஏற்பட்டு நீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் கண்மாய் முழுவதும நீர் இருந்தும் அந்த நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.உடனடியாக மடையை சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால்  நீர் இல்லாமல் பயிரிட்ட அனைத்து பயிர்களும் காய்ந்து சாவியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட கிராமத்தினர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பு செய்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் கிராம நுழைவாயிலில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, ‘பயிருக்கு நீரை பாய்ச்ச முடியவில்லை எனக்கூறி உடனடியாக நீரை பாய்ச்சும் வகையில் மடையை சரி செய்து கொடுங்கள் என பலமுறை வலியுறுத்தியும் மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்த்தது. கடைசி வரை எந்த நடவடிக்கையும் இல்லை. விவசாயத்திற்கு செலவு செய்த பணம் அனைத்தும் வீணானது. இதனால் வரும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்’ என்றனர்.

Related Stories: