பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது; சபரிமலையில் போலீசாரை நிறுத்துவதில் உடன்பாடு இல்லை; உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: சபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த பெண்களுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் என்று உத்தரவிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாது என்றும் தெரிவித்துள்ளது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி பல பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

Advertising
Advertising

இந்த மனுக்களை விசாரிக்க 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று பிந்து, அம்மினி, ரெஹானா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில் கேரள அரசிடம் நாங்கள் பாதுகாப்பு கோரினால் அவர்கள் எங்களுக்கு உரிய பாதுகாப்பு தர மறுக்கிறார்கள். எனவே எங்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

சபரிமலை தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பின் மறுஆய்வு மனுக்கள் நிலுவையில் இருப்பதால் இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். சபரிமலையில் வன்முறை சம்பவம் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும், கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று என்றும், சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Related Stories: