முதுமலையில் துவக்கப்பட்ட சூழல் சுற்றுலா திட்டத்தால் சர்ச்சை

*வன விலங்குகள் பாதிக்கப்படும் அபாயம்

ஊட்டி : நீலகிரி வடக்கு வன கோட்டத்தின் கட்டுபாட்டில் இருந்த சீகூர்,  சிங்காரா மற்றும் தெங்குமரஹாடா ஆகிய 3 வனச்சரகங்கள் கடந்த ஆண்டு முதுமலை  புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டது. இப்பகுதிகள் முதுமலையின் வெளி மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டன. இதன்  மூலம் முதுமலை புலிகள் காப்பகத்தின் பரப்பளவு 688 சதுர கி.மீ.  பரப்பளவிற்கு விரிவடைந்தது. சீகூர், சிங்காரா வனங்களில் சூழல் மேம்பாட்டு  திட்டம் அமுல்படுத்தப்படும் என வனத்துறை அறிவித்தது. இத்திட்டத்திற்கு  ஆரம்பத்தில் ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநள்ளி உள்ளிட்ட கிராமங்களில்  வசிக்கக்கூடிய பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உள்ளூர்  மற்றும் பழங்குடியின ஜீப் ஓட்டுநர்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மூலம்  சுற்றுலா பயணிகளை வனங்களுக்குள் அழைத்து செல்லும் வகையில் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளதாக வனத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல பகுதியில் அண்மையில் சூழல் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. வனத்திற்குள்  வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து செல்ல மசினகுடியில்  இருந்து சீகூர் அருவி, விபூதிமலை, ஆச்சக்கரை, வாழைத்தோட்டம், ஜகலிகடவு,  நெல்சன்தோட்டம் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.130ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.400ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும்,  வாகனங்கள் வாடகைக்கு எடுத்துக்கொள்ள ரூ.2 ஆயிரமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  கேமரா, வீடியோ கேமரா உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியாக கட்டணம்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜகலிகடவு, ஆனிக்கல் கோயில் பகுதி  உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் வாகன சவாரிக்கு அனுமதிக்கப்படுவதால்  புலிகள் மற்றும் அழியும் பட்டியலில் உள்ள வல்ச்சர் எனப்படும் பாறு  கழுகுகளின் இனப்பெருக்கம் பாதிக்கக்கூடிய அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், முதுமலை  புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வெளிமண்டல பகுதியான சீகூர் வனப்பகுதி  அமைதியான இருப்பதால் அழியும் பட்டியலில் உள்ள வல்ச்சர் கழுகுகளின் வாழ்விடமாக உள்ளது. இங்குள்ள உயரமான மரங்களில் அவை கூடுகள் அமைத்து குஞ்சுகள்  பொறிக்கின்றன. தற்போது வனத்துறை மூலம் சூழல் மேம்பாட்டு திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜகலிகடவு, ஆனிக்கல் கோயில், நெல்சன்  எஸ்டேட் என 7 இடங்களுக்கு வாகனங்கள் மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்ல  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் சென்று வருவதன் மூலம் ஏற்படும்  இரைச்சல்களால் வல்ச்சர் கழுகுகள் இனப்பெருக்கம் செய்வதில் சிக்கல்  ஏற்படுவதுடன் அவை அழியக்கூடிய அபாயம் உள்ளது. மேலும், இது புலிகள் வசிக்கக்கூடிய பகுதியாக உள்ளது. வாகனங்கள் சென்று வருவதால் வன  விலங்குகளுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய நிலை உள்ளது. மேலும்,  முக்கிய யானைகள் வழித்தடமாக உள்ள கடந்த சில ஆண்டுக்கு முன்பு இந்த  வனங்களில் சட்ட விேராதமாக இரவு நேரங்களில் தனியார் வாகனங்களில் சுற்றுலா  பயணிகள் அழைத்து செல்லப்படுவதாக வந்த புகாரின் பேரில் சட்டவிேராத வாகன சவாரிக்கு  தடை விதிக்கப்பட்டது.

 தற்போது வனத்துறையே சூழல் சுற்றுலா என்ற  பெயரில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில்  வாகன சவாரிக்கு அனுமதி வழங்கிருப்பது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகன சவாரிக்காக 150க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  எனவே பாதுகாக்கப்பட்ட வனங்களுக்குள் வாகனங்கள் சென்று வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.  இது குறித்து  முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் கூறுகையில்,  அண்மையில்தான் வெளிமண்டல பகுதியில் சூழல் மேம்பாட்டு திட்டம்  செயல்படுத்தப்பட்டது. இதில் சில பகுதிகளில் வாகனங்கள் இயக்கப்படுதால் வன  விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தில் மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை  எடுக்கப்படும், என்றார்.

Related Stories: