மேக் இன் இந்தியாவை ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்திக்கு தண்டனை வழங்குக : மக்களவையில் பாஜக பெண் எம்பிக்கள் போராட்டம்

டெல்லி : மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா திட்டமாக பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக ராகுல் காந்தி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து  நாடாளுமன்ற இரு அவைகளிலும் பாஜக பெண் எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு...

ஜார்க்கண்ட் மாநிலம் ராஜ்மகாலில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தை மோடி அறிவித்தார் என்றும், ஆனால் தற்போது அந்தத் திட்டத்தை ரேப் இன் இந்தியா திட்டமாக மோடி மாற்றி விட்டார் என்று விமர்சித்திருந்தார்.

நாட்டில் எங்கு சென்றாலும் பாலியல் பலாத்கார குற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ராகுல் மன்னிப்பு கேட்க கோரி அமளி

ராகுல் காந்தியின் இந்த பேச்சு சர்ச்சையானதை தொடர்ந்து பாஜக பெண் எம்பிக்கள் நாடாளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை எழுப்பினர்.இந்தியாவை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசிவிட்டதாக பெண் எம்பிக்கள் தெரிவித்தனர். ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.பாஜக பெண் எம்பிக்கள் அமளியை தொடர்ந்ததால் மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

ராகுலுக்கு தண்டனை வழங்குக

இதனிடையே மேக் இன் இந்தியா திட்டத்தை ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல் காந்திக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் வலியுறுத்தி உள்ளார். மேலும் பெண்கள் வன்கொடுமை செய்யப்பட வேண்டும் என தலைவர் ஒருவரே முதல்முறையாக கூறியுள்ளதாகவும் இதுதான் நாட்டு மக்களுக்கு ராகுல் சொல்லவரும் செய்தியா என்றும் ஸ்மிருதி சாடினார். இதே பிரச்சனையை முன் வைத்து மாநிலங்களவையிலும் பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

Related Stories: