×

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட மசோதா இரண்டு அவையிலும் வெற்றி பெற்றதால், அதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இந்திய நாடாளுமன்றத்தில் ஆளும் பாஜ கட்சி குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்தது. கடந்த புதன் கிழமை இந்த மசோதா நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து வியாழக்கிழமை மாநிலங்கள் அவையிலும் வெற்றி பெற்றது. இம்மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மக்களவையில் மசோதா நிறைவேறியதும், பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேறிய நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கவுகாத்தியின் லாலங் கயான் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அப்போது, போராட்டக்காரர்களை விரட்டியபோது போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளதார். இதையடுத்து பாகிஸ்தான், ஆப்கான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், பௌவுத்தர்கள் மற்றும் சீக்கியர்கள், பார்சி, ஜெயின்ஸ், கிறித்தவர்கள் ஆகியோர் 31 டிசம்பர் 2014ல் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.


Tags : Ramnath Govind ,Republican ,Bill , Citizenship Bill 2019, Citizenship Bill, Ram Nath Kovind,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...