×

குழந்தைகளை பாதிக்கும் ஆபாச பட பிரச்னைகளை ஆராயும் எம்.பிக்கள் குழு, சிறப்பு குழுவாக மாற்றம்: வெங்கையா நாயுடு அறிவிப்பு

புதுடெல்லி: ஆன்லைனில் குழந்தைகளை பாதிக்கும் ஆபாச பட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்தற்காக அமைக்கப்பட்ட எம்.பி.க்கள் குழு, சிறப்புக் குழுவாக மாற்றப்பட்டுள்ளது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கல்வி தொடர்பான சந்தேகங்களை இன்டர்நெட்டில்தான் இப்போது அதிகமாக தேடுகின்றனர். அப்போது, ஆபாச படங்களும் அதிகளவில் குறுக்கிடுகின்றன. இது குழந்தைகளை பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்த ஆன்லைன் ஆபாச படங்கள் பிரச்னைகள் குறித்து ஆராய கடந்த 5ம் தேதி எம்.பி.க்கள் குழு அமைக்பட்டது.  ஜெய்ராம் ரமேஷ் ஒருங்கிணைப்பாளராக உள்ள இந்த முறைசாரா குழுவில், 10 கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த குழு பலமுறை கூடி, ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிப்பதை தடுப்பது குறித்து ஆலோசித்தது. இக்குழு முறைசார குழுவாக இருப்பதால், சில அமைப்பினரை சந்தித்து பேசுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் இந்த குழுவை எம்.பி.க்கள் சிறப்புக் குழுவாக அறிவிக்க வேண்டும் என வெங்கையா நாயுடுவிடம், ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்தார். இதை பரிசீலனை செய்த வெங்கையா நாயுடு, ஆபாச பட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யும் எம்.பி.க்கள் குழுவை சிறப்புக் குழுவாக நேற்று அறிவித்தார். இந்த குழுவிடம், ஒரு மாதத்துக்குள் தனது அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் அவர் கூறியுள்ளார்.   இந்தக் குழு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய், வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிக்டாக், ஷேர்சாட், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அமைப்பினரை சந்தித்து, ஆபாச படங்களால் குழந்தைகள் பாதிப்பதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.


Tags : Group ,MPs , Children, porn movie problems, Venkaiah Naidu
× RELATED 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான...