மத்திய அமைச்சரின் கருத்துக்கு பதிலடி: சமஸ்கிருத மொழியை விட தமிழ் தொன்மையானது: மக்களவையில் ஆ.ராசா ஆவேசம்

புதுடெல்லி: டெல்லி, ஆந்திராவில் உள்ள 3 நிகர்நிலை சமஸ்கிருத பல்கலைக் கழகங்களை மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகங்களாக மாற்றும் மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இம்மசோதாவை தாக்கல் செய்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ‘சமஸ்கிருதமே நாட்டின் தொன்மையான மொழி. அது, விஞ்ஞான மொழியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது,’ என்று குறிப்பிட்டார். மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய பாஜ எம்பி சத்யபால் சிங்,  ‘சமஸ்கிருதம், அனைத்து மொழிகளின் தாய்,’ என்று புகழ்ந்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விவாதத்தில் ஆ.ராசா பேசியதாவது: இந்தியாவில் திராவிட பண்பாடு, ஆரிய பண்பாடு என்று இரண்டு கொள்கை சிந்தனைகள் உள்ளன. தமிழ் உள்பட திராவிட மொழிகளுக்கும், சம்ஸ்கிருத மொழிக்கும் சிறப்பு இயல்புகள் உள்ளன. எந்த மொழியும் வேறு மொழியில் ஆதிக்கம் செலுத்த முடியாது.  

நாங்கள் வட நாட்டு மொழிகளை எதிர்க்கவில்லை. தமிழ் மொழி சமஸ்கிருதத்தில் இருந்து வரவில்லை. திராவிட மொழிகளில் 4,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமைமிக்கது தமிழ்.  இதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. ஆனால், சமஸ்கிருதம் 2,500 ஆண்டுகள் மட்டுமே பழமையானது.  சமஸ்கிருதத்தின் மூலம் அறிவியல் கல்வி குறித்து பேசப்பட்டு வருவது வியப்பளிக்கிறது. இதன் மூலம், சமஸ்கிருதத்தை திணிக்கும் அரசின் மறைமுக எண்ணம் வெளிப்படுகிறது. சமஸ்கிருதம் அழிந்து வரும் மொழியாக உள்ளது. அதை மத்திய அரசு ஊக்கப்படுத்துவதற்கு நாங்கள் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால், சமஸ்கிருத மொழி மேம்பாட்டுக்கு ₹150 கோடி ஒதுக்கீடு செய்த இந்த அரசு, மற்ற அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சேர்த்து வெறும் ₹12 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இந்த பாகுபாடு ஏன்? என்றார். இதற்கு பாஜ எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடும் கூச்சலிட்டர். பின்னர் குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் போக்ரியால், ‘‘அனைத்து மொழிகளையும் ஒருங்கிணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். இதைத் தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது.

Related Stories: