குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசாமில் நடந்த போராட்டத்தில் பயங்கரம் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி: 2 பேர் படுகாயம்; ஷில்லாங்கிலும் 144 தடை உத்தரவு

கவுகாத்தி: குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். வடகிழக்கில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அசாமைத் தொடர்ந்து மேகாலயா தலைநகர் ஷில்லாங்கிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மத ரீதியாக பாதிக்கப்பட்டு இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த முஸ்லிம் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்குவதற்கான குடியுரிமை சட்டத் திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இம்மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மக்களவையில் மசோதா நிறைவேறியதும், பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநிலங்களவையில் நேற்று முன்தினம் மசோதா நிறைவேறிய நிலையில், போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அசாமில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பை பலப்படுத்த, 350 ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், தடை உத்தரவை மீறி நேற்றும் அசாமில் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கவுகாத்தியின் லாலங் கயான் பகுதியில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சாலையில் குவிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது, போராட்டக்காரர்களை விரட்டியபோது போலீசார் மீது சிலர் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அப்பகுதியே போர்க்களமானது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பலியானதால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. 2 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல், கவுகாத்தி-ஷில்லாங் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை விரட்டினர்.

கம்ரப் மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவுவதால் அனைத்து அலுவலகம், பள்ளி, கல்லூரிகள் நேற்று மூடப்பட்டிருந்தன. சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகள் முடக்கப்பட்டன. ராங்கியா நகரில் போராட்டக்காரர்கள் சாலையில் டயர்களையும், வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தின்சுகியா, லகிம்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நேற்று முழுமையாக பணியை நிறுத்தினர். மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கவுகாத்தி, தின்சுகியா, ஜோர்கட், திப்ரூகர் மாவட்டங்களில் நேற்று காலை ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பை நடத்தினர். இதற்கிடையே, வன்முறை மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தின் 10 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது.

நேற்று பகல் 12 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அசாம் தவிர மேகாலயா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று ஆங்காங்கே வன்முறைகள் நடந்தன. மேகாலயாவின் ஷில்லாங்கில் மார்க்கெட் பகுதிகளில் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.  ஷில்லாங்கிலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் அங்கும் 144 தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் காரணமாக, ரயில் சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. நாட்டின் பிற பகுதியிலிருந்து அசாம், திரிபுராவுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், விமான சேவையும் முழுவதும் முடங்கி உள்ளது. வடகிழக்குக்கு செல்லும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘அசாம் மக்கள் அமைதி காக்க வேண்டும். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அசாம் மக்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பு உறுதி செய்யப்படும்,’ என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து 3வது நாளாக அசாமில் வன்முறைகள் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

பிரதமரும், முதல்வரும் துரோகம் செய்து விட்டனர்

கவுகாத்தியில் உள்ள லடாசில் மைதானத்தில் ஏஏஎஸ்யு, கேஎம்எஸ்எஸ் ஆகிய மாணவர் அமைப்பினர் நேற்று மாபெரும் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்பேரில், கல்லூரி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு குவிந்தனர். சினிமா துறையை சேர்ந்த முக்கிய கலைஞர்கள், இசைத் துறையினரும் பங்கேற்றனர். கூட்டத்தில் மாணவர் அமைப்பின் ஆலோசகர் சமுஜால் பட்டாசார்யா பேசுகையில், ‘‘குடியுரிமை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றி, பிரதமர் மோடியும், முதல்வர் சர்பானந்தா சோனோவாலும் அசாம் மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர்,’’ என்றார்.

ரயில்வே சிறப்பு படை குவிப்பு

வடகிழக்கு மாநில போராட்டத்தில் ரயில் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கில் அனைத்து ரயில் நிலையங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 7 கம்பெனி ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினரை மத்திய ரயில்வே அமைச்சகம் அனுப்பி  வைத்தது. இதைத் தொடர்ந்து தற்போது 12 கம்பெனி சிறப்பு படையினர் வடகிழக்கு மாநில பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கவுகாத்தியில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறியதற்காக போலீஸ் கமிஷனர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். பல உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்டர்நெட் ‘கட்’ ஆனா... மோடி டிவிட்

அசாம் மொழியிலும், ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட தனது டிவிட்டர் பதிவில், ‘குடியுரிமை சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதால், அசாம் சகோதர, சகோதரிகள் யாரும் அச்சப்பட வேண்டாம். யாரும் உங்கள் உரிமை, தனித்தன்மை, அழகிய கலாசாரத்தை பறிக்க அனுமதிக்க மாட்டோம். அசாம் கலாசாரம் தொடர்ந்து செழித்து வரும். அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ல் உள்ளபடி அரசியல், மொழி, கலாசாரம் மற்றும் நில உரிமையை பாதுகாக்க நானும், மத்திய அரசும்  உறுதி பூண்டுள்ளோம்,’’ என கூறி உள்ளார். இதை கிண்டலடித்துள்ள காங்கிரஸ், தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘நமது அசாம் சகோதர, சகோதரிகளால் உங்களின் உத்தரவாதத்தை படிக்க முடியாது பிரதமர் மோடி அவர்களே... ஏனெனில், அங்கு இன்டர்நெட் துண்டிக்கப்பட்டு இருப்பதை நீங்கள் மறந்துள்ளீர்கள்,’ என பதில் டிவிட் செய்துள்ளது.

வங்கதேச அமைச்சர் பயணம் திடீர் ரத்து:

வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமென் நேற்று மாலை டெல்லி வருவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம், குடியுரிமை திருத்த மசோதாவே காரணம் என கூறப்படுகிறது. ஆனால், உள்நாட்டில் சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் மோமெனின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories: