16 எம்பி.க்கள் பங்கேற்காதது ஏன்? பரபரப்பு பின்னணி

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகள், எதிராக 99 ஓட்டுகள் விழுந்தன. முதலில் எதிர் ஓட்டுகள் 105 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 99 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவையில் மொத்த எம்பி.க்களின் எண்ணிக்கை 245. இதில் 5 இடங்கள் காலியாக உள்ளன. பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 115 உறுப்பினர்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 63 உறுப்பினர்களும், பிற கட்சிகளுக்கு 62 உறுப்பினர்களும் உள்ளனர். மசோதாவை நிறைவேற்ற அவையில் உள்ள உறுப்பினர்களில் 50 சதவீதம் பேரின் ஆதரவு தேவை.  குடியுரிமை மசோதா மீதான வாக்கெடுப்பில், ஆதரவாக 125-130 ஓட்டுகளும், எதிர்ப்பாக 110 ஓட்டுகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  நேற்று முன்தினம் ஓட்டெடுப்பில் 224 உறுப்பினர்களே பங்கேற்றனர்.

கடைசி நேரத்தில் சிவசேனா ஓட்டெடுப்பை புறக்கணித்தது. அக்கட்சிக்கு 3 எம்பி.க்கள் உள்ளனர். இதே போல், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலா 2 எம்பி.க்களும், திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், சமாஜ்வாடி, மதச்சார்பற்ற ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் தலா ஒரு எம்பி.க்களும் நேற்று முன்தினம் அவைக்கு வரவில்லை.  பாஜ.வின் 2 எம்பி.க்களும், 2 சுயேச்சை எம்பி.க்களும் என மொத்தம் 16 பேர் ஆப்சென்ட் ஆகி உள்ளனர். இதில், பாஜ.வுக்கு எதிர்பார்த்தபடி 125 ஓட்டுகள் கிடைத்துள்ளன.

ஆனால், 11 எம்பி.க்கள் புறக்கணிப்பு, உடல் நலக்குறைவு, திருமணம் போன்ற காரணங்களால் மற்ற 5 எம்பிக்கள் ஓட்டு போடாததால் எதிர்க்கட்சிகளின் ஓட்டு 99 ஆக சரிந்துள்ளது. கடந்த பாஜ ஆட்சியில், மக்களவையில் அக்கட்சி பலம் பொருந்தி இருந்தாலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கை ஓங்கியிருந்தது. ஆனால், இம்முறை மக்களவை மட்டுமின்றி மாநிலங்களவையிலும் பாஜ கணிசமான எண்ணிக்கையை பெற்றுள்ளது. அதோடு, எதிர்க்கட்சிகள் பலம் தொடர்ந்து சரிந்து வருவது முக்கிய அரசியல் கட்சிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

Related Stories: