திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 10 லட்சம், 5 சவரன் அபேஸ்: மோசடி பெண் மீது போலீசில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பள்ளிக்கரணை மனோகர் நகரை சேர்ந்த தொழிலதிபர் பாலச்சந்தர் (39) நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் வெளிநாடுகளில் வேலைக்கு ஆட்கள் அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறேன். எனக்கு வடபழனி, மும்பை, மற்றும் துபாயில் அலுவலகங்கள் உள்ளன. எனக்கு ஹேமலதா என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு எனது மனைவி இறந்துவிட்டார். இதனால், எனது குழந்தைகள் மாமனார் வீட்டில் உள்ளனர்.

இந்நிலையில் எனது நிறுவனத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பயிற்சிக்காக வந்த செந்தாமரை (38) என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது செந்தாமரை தனக்கு சொந்த ஊர் பெங்களூரு என்றும், எனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் கூறினார். பெற்றோர் இறந்துவிட்டதால் தனது பாதுகாப்புக்காக இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறினார். எங்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து, எனது பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். இருவரும் பல இடங்களுக்கு சென்று நெருக்கமாக இருந்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததால் எனது அம்மா வருங்கால மருமகள் என்று 5 சவரன் செயின் கொடுத்தார். பிறகு வளர்ப்பு மகள் திருமணத்திற்காக 7 லட்சம் பணத்தை வின்சென்ட்குமார் என்பவரிடம் கடன் வாங்கியதாக கூறினார். அதற்கான வட்டி கட்ட பணம் தேவைப்படுவதாக சிறுக சிறுக 10 லட்சம் பணத்தை வாங்கினார். அதோடு இல்லாமல் என்னுடைய கிரெடிட் கார்டை அவர்தான் பயன்படுத்தி வந்தார்.

காதலி செந்தாமரைக்கு மது மற்றும் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்தது. வருங்கால மனைவி என்பதால் நான் அதை கண்டித்தேன். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே செந்தாமரை தனது பெரியம்மா மகன்களுக்கும், புளியாந்தோப்பு காவல் நிலையத்தில் வேலை செய்து வந்த எஸ்.ஐ சந்தோஷ்குமாருக்கும் இடையே ரியல் எஸ்டேட் சம்மந்தமாக பிரச்னை இருந்து வருகிறது. இதனால் விசாரணைக்கு செல்வதாக அடிக்கடி சொல்லிவிட்டு சென்றார். பின்னர் விசாரித்த போது, எஸ்.ஐ. சந்தோஷ்குமாருடன் குடும்பம் நடத்தி, தன்னை ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தது தெரியவந்தது.

மேலும், செந்தாமரை ஈரோடு காலிங்கராய பாளையத்தை சேர்ந்தவர் என்றும், அவருக்கு சதாசிவம் என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதுதவிர கடந்த 2006 முதல் 2016ம் ஆண்டு வரை பஞ்சாயத்து தலைவராக இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் செந்தாமரையை திருமணம் செய்யும் முடிவை கைவிட்டு அவரிடம் நான் கொடுத்த 10 லட்சம் மற்றும் 5 சவரன் செயின், லேப்டாப், பைக்கை திரும்ப கேட்டு கடந்த மாதம் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது என்னை செந்தாமரை மற்றும் சிலர் அடித்து உதைத்து கொலை மிரட்டல் விடுத்தனர். அதோடு இல்லாமல் வடபழனி கோயிலில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வைத்து திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக மிரட்டி வருகிறார். எனவே, ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னை ஏமாற்றிய செந்தாமரை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

பின்னணியில் ஐஜி?
தொழிலதிபர் பாலச்சந்தர் புகார் அளித்த செந்தாமரை என்ற பெண், ஏற்கனவே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அதில், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சந்தோஷ்குமார் என்பவர் முதல் திருமணத்தை மறைத்து என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, எனது நகைகள் மற்றும் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்தார். புகாரின் பேரில், பள்ளிக்கரணை போலீசார் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரிடம் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, செந்தாமரைக்கு ஆதரவாக சென்னை காவல் துறையில் பணியாற்றி தற்போது வேறு பிரிவில் ஐஜியாக உள்ள அதிகாரி ஒருவர், பள்ளிக்கரணை போலீசாருக்கு நேரடியாக போன் செய்து செந்தாமரை அளித்த புகாரின் படி உதவி ஆய்வாளர் மீது உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று நெருக்கடி கொடுத்துள்ளார். இதனால், போலீசார் அவசர அவசரமாக உதவி ஆய்வாளர் சந்தோஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். அதோடு இல்லாமல் சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மோசடி பெண் என்று தெரிந்தும் ஐஜி நிலையில் உள்ள உயர் அதிகாரி தனது செல்வாக்கை பயன்படுத்திய ரகசியம் என்ன என்று தெரியவில்லை என போலீசார் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Tags : Businessman ,shaving abuser , 10 lakh, fraudulently told businessman,,wanted , marry
× RELATED மேட்டூர் அருகே தொழிலதிபர் கொலை...