பிஸ்கட், ஹேர் ஆயில் கூட விற்கலே...பொருளாதார பின்னடைவால் செலவைக் குறைக்கும் மக்கள்: நிறுவனங்கள் கலக்கம்

புதுடெல்லி: பொருளாதார மந்த நிலை காரணமாக அத்தியாவசிய  நுகர்பொருட்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமாக விற்பனையாகும் நுகர்பொருட்கள், கடும் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. கடந்த காலாண்டில் டூத்பேஸ்ட் விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது. ஹேர் ஆயில் விற்பனை 0.4 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. பிஸ்கட் விற்பனை 5 சதவீதம்தான் அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த காலாண்டில் டூத்பேஸ் 13 சதவீதம், ஹேர் ஆயில் 12 சதவீதம், பிஸ்கட் 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் கடந்த ஆண்டு 20 சதவீத விற்பனை உயர்வை சந்தித்த ஷாம்பு விற்பனை, தற்போது சுத்தமாக படுத்து விட்டது. நுகர்பொருள் விற்பனையில் மேற்கண்டவை கணிசமான பங்களிப்பவை.

நாட்டின் பொருளாதாரம் படு மோசமாக சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் செலவை கட்டுப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஊரக பகுதிகளில் மக்கள் மிகவும் சிக்கனமாக செலவு செய்ய தொடங்கி விட்டனர். இதுதான் விற்பனை சரிவுக்கு மிக முக்கிய காரணம். ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அளவுக்கு விற்பனை ஆகக்கூடிய இந்த பொருட்களின் விற்பனை கடும் பின்னடைவை சந்தித்துள்ளதால் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன. ஜிஎஸ்டி, பண மதிப்பு நீக்கத்தின் தாக்கத்தால், சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு, செலவு செய்வதை நுகர்வோர் பெரிய அளவில் கட்டுப்படுத்தியுள்ளனர். விற்பனையை அதிகரிக்க சிறிய பேக்கிங்குகளில் கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோல், புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்வதையும் ஒத்திவைத்துள்ளோம் என நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.


Tags : companies ,downturn , economic downturn, cost-cutting, people , companies are mixed
× RELATED புதுவண்ணாரப்பேட்டை...