குடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து

கவுகாத்தி: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் 37வது லீக் போட்டி கவுகாத்தி இந்திரா காந்தி அரங்கில் நேற்று இரவு நடைபெறும் என அட்டவணையில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தப் போட்டியில்  நார்த்ஈஸ்ட் யுனைடட் எப்சி-சென்னையின் எப்சி அணிகள் மோத இருந்தன. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய  குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு  அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அங்கு வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து தீவிர  போராட்டங்கள் நடந்து வருகின்றன. கவுகாத்தி செல்லும் விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

ஐஎஸ்எல் நிர்வாகம் நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில், ‘கவுகாத்தியில் நிலவும் அமைதியின்மை காரணமாக நார்த்ஈஸ்ட்-சென்னை அணிகள் மோதும் 37வது லீக் போட்டி தள்ளி வைக்கப்படுகிறது. கடந்த 48 மணி நேரமாக நிலைமைகளை கண்காணித்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள், வீரர்கள், லீக் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவு எடுக்க காரணம். கவுகாத்தி போட்டி குறித்த மற்றத் தகவல்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஞ்சி ஆட்டமும் பாதிப்பு

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் போராட்டங்கள் காரணமாக ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரும் பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில்  அசாம்-சர்வீசஸ் அணிகளுக்கு இடையேயும், திரிபுரா மாநிலம் அகர்தலாவில் திரிபுரா-ஜார்கண்ட் இடையே நடைபெற இருந்த கடைசிநாள் ஆட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. பிசிசிஐ பொது மேலாளர் சபா கரீம், ‘‘ஆட்டத்தை தொடர வேண்டாம் என்றும், வீரர்களை ஓட்டலை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என்று மாநில சங்கங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மீதி ஆட்டத்தை பின்னர் விளையாடுவதா அல்லது புள்ளிகளை பகிர்ந்துக் கொள்வதா என்பதை பிறகு முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: