தொடர்ந்து தோற்கும் சோகம் தமிழகத்தை வென்றது கர்நாடகம்

திண்டுக்கல்: ரஞ்சி கோப்பை தொடரில் கர்நாடகம் 26 ரன் வித்தியாசத்தில் தமிழகத்தை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.   உள்நாட்டு தொடர்களில்   கர்நாடகத்திடம் தொடர்ந்து தமிழ்நாடு தோற்கும் சோகம்  தொடர்கதையாகி விட்டது. திண்டுக்கல்லில் டிச.9ம் தேதி தொடங்கிய  ரஞ்சி கோப்பை தொடரின் முதல் ெடஸ்டில் டாஸ் வென்ற கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு முதல் இன்னிங்சில் தினேஷ் கார்த்திக்  சதத்தால்  307 ரன் எடுத்தது. முதல் இன்னிங்சில் 29 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய கர்நாடகா 3வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன் எடுத்திருந்தது.

அதனையடுத்து 118 ரன் முன்னிலையுடன் கடைசி நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய கர்நாடகாவை 151 ரன்னுக்கு சுருட்டியது தமிழ்நாடு.  ஆர்.அஸ்வின் 4, கே.விக்னேஷ் 3, சாய் கிஷோர், சித்தார்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து  181ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழகம் களம் கண்டது.  தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த 42ரன் எடுத்து நல்ல தொடக்கம் தந்தார். ஆனால்  முருகன் அஸ்வின் ஆட்டமிழக்காமல் 23, அறிமுக வீரர் மணிமாறன் சித்தார்த் 20 ரன் எடுத்தனர். மற்றவர்கள் படு சுமாராக விளையாடியதால் தமிழ்நாடு 2வது இன்னிங்சில் 154 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. அதனால்  கர்நாடகா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. அசத்தலாக பந்து வீசிய கிருஷ்ணப்பா கவுதம் முதல் இன்னிங்சில் 6, 2வது இன்னிங்சில் 8 என மொத்தம் 14  விக்கெட்களை அள்ளினார்.  தமிழக வீரர் ஆர்.அஸ்வின் 2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் எடுத்தார். சமீபத்தில் நடந்த  விஜய் ஹசாரோ ஒருநாள் தொடர்,  சையத் முஷ்டக் அலி டி20 தொடர்களின் இறுதிப் போட்டிகளில், லீக் போட்டிகளில்   கர்நாடகாவிடம்  தோற்றதற்கு ரஞ்சி தொடரில்  தமிழகம் பதிலடி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கர்நாடகாவிடம் தோற்கும் சோகம் தமிழகத்துக்கு தொடர் கதையாகி விட்டது.

Related Stories: