தொடர்ந்து விலைபோகும் உள்ளாட்சி பதவிகள் ஏலத்தை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை : நடவடிக்கை எடுக்காமல் ஆணையம் மெத்தனம் என புகார்

சென்னை : தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து பல மாவட்டங்களில் தலைவர், உறுப்பினர் பதவிகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு வருகிறது. இதை மாநில தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாத நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினமும் ஏலம் விடப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  அருகே கோட்டைப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த ஏலத்தை தட்டிக்கேட்ட வாலிபர்  அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக  உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரண்டு  கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது.  இந்நிலையில் கடலூர், திருச்சி, பெரம்பலூர், ராமநாதபுரம், தர்மபுரி உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பதவிகள் ரூ.25 லட்சம் வரையிலும், உறுப்பினர் பதவிகள் ரூ.2 லட்சம் வரையிலும் ஏலம்  விடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களின்  கலெக்டர்கள் விசாரணை நடத்துவதாக கூறப்பட்டாலும் மாநில தேர்தல் ஆணையம் சரிவர கண்டுகொள்ளாததால் தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில்  மொத்தம் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் ராஜபாளையம், சிவகாசி,  திருவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, வத்திராயிருப்பு ஆகிய 5  ஒன்றியங்களுக்கு 27ம் தேதியும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி,  சாத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும்  உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர்  அருகே வெம்பக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது கோட்டைபட்டி கிராமம். இங்கு  1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. வெம்பக்கோட்டை ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விடுவது தொடர்பாக, நேற்று அதிகாலை 2 மணிக்கு  ஒரு சமூகத்தினர் கோட்டைப்பட்டியில் உள்ள சமுதாய கலையரங்கில் ஊர் கூட்டம்  நடத்தியுள்ளனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் ராமசுப்பு போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் காங்கிரஸ் கட்சி  பிரமுகர் சுப்புராமும், தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப  மனு வாங்கி வந்துள்ளார். இக்கூட்டத்துக்கு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அழைப்பு விடுக்காமல், ராமசுப்பு தனக்கு வேண்டிய  நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த  அப்பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (27), தனியார் வங்கி விற்பனை பிரிவு மேலாளர் கூட்டத்திற்கு சென்று தட்டி கேட்டுள்ளார். மேலும் இதுபோன்ற  கூட்டத்துக்கு சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும். தனது அண்ணன் முறை உறவினரான சுப்புராம் தேர்தலில் போட்டியிடுவதற்கு  விருப்ப மனு அளித்துள்ளது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த சிலர், சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். இதில் தலையில்  பலத்த காயமடைந்த சதீஷ்குமார் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு  சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த  டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து  இரவே அரசு மருத்துவமனை முன்பு கொலையான சதீஷ்குமாரின் உறவினர்கள் திரண்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

தகவலறிந்த வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் வந்து விசாரணை நடத்தினார். இதுகுறித்து  ஏழாயிரம்பண்ணை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து கோட்டைபட்டியைச்  சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் ராமசுப்பு (47), அவரது ஆதரவாளர்கள்  கணேசன் (22), முத்துராஜ் (36), சுப்புராம் (26), ராம்குமார் (22),  சுப்புராஜ் (52), செல்வராஜ் (44) ஆகியோரை கைது செய்தனர். ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த  ஏலத்தை தட்டிக்கேட்ட வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டது சாத்தூர்  பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து  கோட்டைப்பட்டி கிராமத்திலும், சிவகாசி அரசு மருத்துவமனையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு அருகே 32 லட்சத்துக்கு ஏலம் எடுத்த தொழிலதிபர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்குட்பட்டது திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி ஒருவரை தேர்வு செய்வதற்கு அந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் கூட்டம் சிவன்கோயிலில் நேற்றுமுன்தினம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பதவியை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. இதற்கு 3 பேர் போட்டி போட்டு ஏலம் கேட்டனர். கடைசியாக தொழிலதிபர் ஒருவர், 32 லட்சத்துக்கு தலைவர் பதவியை ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. அட்வான்சாக அவர் 2 லட்சத்தை ஊர் கூட்டத்தில் செலுத்தினார். மீதமுள்ள 30 லட்சத்தை வரும் 15ம் தேதி கொடுத்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான விஜய்யிடம் கேட்டபோது, ஏலம் எடுத்தவர் மீதும், ஏலம் விட்டவர்கள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பாப்பநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை கலெக்டர் கோவிந்தராவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். கலெக்டரிடம் புகார்: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி ஊராட்சி தலைவர் பதவி 21 லட்சத்துக்கு ஒரு பிரிவினர் ஏலம் விட்டுள்ளதாக காலனி கிராம தலைவர் முருகையா தலைமையில் 10க்கும் மேற்பட்ட காலனி மக்கள், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு 15 லட்சம் ஏலம்

ஊத்துக்கோட்டை: பூண்டி ஒன்றிய வெலமகண்டிகை ஊராட்சி தலைவர் பதவி மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கிடையே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு அதே பகுதியை சேர்ந்த வசதி படைத்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதவியை ஏலம் எடுத்த நபர் வெலமகண்டிகை கிராமத்தில்  உள்ள 2 கோயில்களுக்கு 15 லட்சம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டு முன்பணம் 2 லட்சம் கைமாறி இருப்பதாகவும் எனவே அவரை ஊராட்சி மக்கள் போட்டியின்றி தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அப்பகுதி சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘‘கடந்த உள்ளாட்சி  தேர்தலின்போது தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு 12 லட்சம் தருவதாக உறுதி செய்யப்பட்டது. அதற்குள் தேர்தல் நின்று விட்டது. தற்போது நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேறு ஒருவர் ₹15 லட்சம் தருவதாக கூறியுள்ளார். அதில் ₹5 லட்சம் சிவன் கோயிலுக்கும், 10 லட்சம் ஆஞ்சநேயர் கோயிலுக்கும் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: