×

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலி அதிகாரிகளை வழக்கில் சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மேட்டுப்பாளையத்தில் 20 அடி சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் தொடர்பான வழக்கில் நில உரிமையாளர் மற்றும் தவறு செய்த அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் காலனியில் கடந்த 2ம் தேதி 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தலித் சமுதாயத்தை சேர்ந்த 17 பேர் பலியானார்கள். இதையடுத்து, நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை ஐகோர்ட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுசெயலாளர் சாமுவேல் ராஜ் ஒரு பொது நல மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்ப அரசு அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர். அந்த இடத்தை தலித் மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது சாதி பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது. மழையினால், சுவர் மிகவும் மோசமான நிலையில் இருந்திருப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சுவரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடவேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் விசாரித்து, நில உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்க்கவும், அதிக தகவல்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 24க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Mettupalayam Mettupalayam , High order, add 17 officers, Mettupalayam
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது