×

தமிழகத்தில் முதல்முறையாக போலீஸ் அதிரடி ஆபாச படங்களை பார்த்து பகிர்ந்த திருச்சி ஏ.சி. மெக்கானிக் கைது : மேலும் 300 பேர் சிக்குகிறார்கள்

திருச்சி: தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்து, பகிர்ந்த திருச்சி ஏ.சி. மெக்கானிக் கைது செய்யப்பட்டார். இவரது பேஸ்புக் பாலோயர் 300 பேரும் கண்காணிக்கப்படுகின்றனர். ஆபாச படங்கள் பார்ப்பதில் உலகிலேயே இந்தியாதான் நம்பர் 1 இடத்தில் உள்ளது என்று எப்.பி.ஐ. (பெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேசன் ஏஜென்சி) மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அளித்தது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த 3,000 பேரின் பட்டியல் எடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை ஐ.பி. முகவரியை வைத்து யார் யாரெல்லாம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தது. இந்த பட்டியலில் திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (42), குழந்தைகள் தொடர்புடைய ஆபாச படங்களை அதிகம் பார்த்ததுடன், அதனை வாட்ஸ்அப் குரூப்பில் உள்ளவர்களுக்கு பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரது பேஸ்புக், வாட்ஸ்அப்பை நேற்றுமுன்தினம் இரவு திடீரென முடக்கினர்.

பின்னர் நேற்று காலை அவரது வீட்டுக்கு கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் அதிரடியாக சென்று மடக்கினர். போக்சோ சட்டப்படியும், ஐ.டி.ஆக்ட் 2000 படியும் வழக்குப்பதிந்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் கிறிஸ்டோபரை ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி வனிதா விசாரித்து அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதன்பின், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கிறிஸ்டோபர் பேஸ்புக்கின் பாலோயர்களாக 300 பேர் இருந்துள்ளனர். அவர்களுக்கு இவர் ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். அந்த 300 பேரின் முகவரியையும் போலீசார் சேகரித்து உள்ளனர். இதில் திருச்சியில் மட்டும் 100 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் பலர் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இதுதவிர வாட்ஸ்அப்பில் 15 குரூப்புகளுக்கு அனுப்பி யுள்ளார். அவர்கள் குறித்தும் ரகசியமாக விசாரணை நடக்கிறது. குழந்தைகள் ஆபாச படத்தை பார்த்து பகிர்ந்ததாக தமிழகத்திலேயே முதன்முதலாக கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் ஐடிஐ வரை படித்தவர். 10 ஆண்டுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்துள்ளது. குழந்தைகள் இல்லை. நாகர்கோவிலில் சில ஆண்டுகள் அவர் ஹவுஸ் கீப்பிங் வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

2 முறை பேஸ்புக்கை முடக்கியும் வெவ்வேறு பெயரில் கணக்கு

கிறிஸ்டோபர் அல்போன்ஸ் பிடிபட்டது குறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ கூறியதாவது:  எங்கள் சமூக ஊடகப்பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர் முத்துப்பாண்டி பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள ஊடகங்களை கண்காணித்தபோது ‘‘நிலவன் நிலவன்’’ என்ற பேஸ்புக்கில் குழந்தைகள் தொடர்பான பல்வேறு ஆபாச படங்களை பதிவிட்டிருந்தது தெரியவந்தது. சைபர் குற்றப்பிரிவு மூலமாக ஆய்வு ெசய்தபோது அந்த செல்போன் எண்ணுக்கு உரியவர் கிறிஸ்டோபர் என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கன்டோன்மென்ட் மகளிர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் ‘‘நிலவன்-நிலவன்’’ என்ற பெயரில் படத்தை பார்த்து பகிர்ந்துள்ளார். அதை போலீசார் முடக்கியதும், ‘‘ஆதவன்-ஆதவன்’’ என்ற பெயரில் புதிய கணக்கை தொடங்கி அதே வேலையை செய்துள்ளார். அதையும் முடக்கியதும் மீண்டும் ‘‘நிலவன்- நிலவன்’’ என்ற பெயரில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்துள்ளார்.

சில தினங்களுக்கு முன் குழந்தைகள் ஆபாச படங்கள் பார்ப்போரை போலீசார் கண்காணிப்பதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து கிறிஸ்டோபர் தனது பேஸ்புக்கில் உள்ள அனைத்து ஆபாச படங்களையும் அழித்து விட்டார். தற்போது அவரது செல்போனை ஆய்வு செய்தபோது 300 ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த செல்போன் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இவ்வாறு வரதராஜு கூறினார்.

7 வருடம் வரை சிறை தண்டனை

கமிஷனர் வரதராஜு கூறுகையில், குழந்தைகள் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வைத்திருப்பதும், பதிவிடுவதும், பகிர்வதும் ஐடி ஆக்ட் 67(ஏ), (பி) படி குற்றமாகும். இந்த சட்டப்படி குற்றவாளிக்கு முதல் முறையாக இருந்தால் 5 வருட சிறை தண்டனையும், ₹10 லட்சம் அபராதமும் மற்றும் போக்சோ சட்டப்படி 7 வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இணையதளங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து சமூக சீர்கேட்டிற்கு வழிவகை செய்யும் இதுபோன்ற நபர்கள் மீது போக்சோ சட்டத்தின்படியும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Tags : Pinterest Mechanic , Trichy AC , Twitter Share ,Facebook Share,Pinterest Mechanic Arrested
× RELATED டிவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை...