31வது நாளாக 120 அடியாக நீடிக்கும் மேட்டூர் நீர்மட்டம் : விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சி

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 31வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால், டெல்டா விவசாயிகள், மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து, பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் ஆகஸ்ட் 13ம் தேதி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் அடுத்தடுத்து 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது. கடந்த மாதம் 11ம் தேதி நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதன் பிறகு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே நீடித்து வருகிறது. நேற்று 31வது நாளாக 120 அடியாக நீடிப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள், மேட்டூர் அணை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 5,000 கனஅடியாக இருந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 4,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 750 கனஅடியும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சி. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5300 கனஅடியாக நீடிக்கிறது.

Related Stories: