×

ஐஜிக்கு தெரியாமல் மோசடியில் ஈடுபடும் டிஐஜிக்கள் அயல்பணி அடிப்படையில் 15 நாட்களுக்கு மட்டுமே பணியமர்த்த வேண்டும் : பதிவுத்துறை உத்தரவு

சென்னை: சார்பதிவாளர்களை அயல்பணி அடிப்படையில் 15 நாட்களுக்கு மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்று பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சார்பதிவாளர்கள் காலி பணியிடங்கள் காரணமாக பெரும்பாலான அலுவலகங்களில் பதிவு இல்லாத பணிக்கு மாற்றப்பட்ட சார்பதிவாளர்கள், அசல் பதிவுப்பிரிவு கண்காணிப்பாளர்கள் பதிவுப்பணியில் அயல்பணி அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜியிடம் முறையாக ஒரு சில டிஐஜிக்கள் தெரிவிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி கொண்டு அந்த ஊழியர்கள் பல மாதங்களாக ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜிக்கு ஏராளமான புகார்கள் வந்தது. அதன்பேரில், பதிவுத்துறை ஐஜி அனைத்து மண்டல டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், சார்பதிவாளர் பணிக்காலியிடங்கள் ஏற்படும் அலுவலகங்களால் மாற்று ஏற்பாடாக தற்காலிக சார்பதிவாளர்களை பகராண்மையில் நியமிப்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

எனினும் நடைமுறையில் டிஐஜிக்கள்/மாவட்ட பதிவாளர்களால் மேற்கொள்ளப்படும் பகராண்மை நியமனங்கள் நிர்வாக நலனை கருத்தில்கொள்ளாமல் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் கோரிக்கைக்கு இணங்கி முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில டிஐஜிக்களால் இவ்வாறான பகராண்மை நியமனங்களுக்கு பதிவுத்துறை தலைவரின் பின்னேற்பும் கோரப்படுவதில்லை. எனவே கீழ்கண்ட அறிவுரைகளை தவறாது கடைப்பிடிக்க மாவட்ட பதிவாளர்கள்/டிஐஜிக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதன்படி,

* சார்பதிவாளர்களின் விடுப்பு/ஓய்வு/மாறுதல் ஆகியவற்றின் அடிப்படையில், காலியிடம் எழும் போது மாற்று ஏற்பாடாக அப்பதிவு மாவட்டத்தில் பதிவில்லா பணியில் பணிபுரியும் சார்பதிவாளர்கள் அல்லது 2 சார்பதிவாளர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள ஒரு சார்பதிவாளர் அல்லது அசல் பதிவுப்பிரிவு கண்காணிப்பாளர் ஆகியோரை சார்பதிவாளர் பொறுப்பில் தற்காலிகமாக 15 நாட்களுக்கு மட்டும் பணிபுரிய ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
* 15 நாட்களுக்கு மேல் காலியிடம் ஏற்படும் நிகழ்வுகள் உடனடியாக பதிவுத்துறை தலைவரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.
* சார்பதிவாளர் பொறுப்பிற்கு மாற்று ஏற்பாடு செய்வது தொடர்பாக நிர்வாக நலனுக்காகவேயன்றி, பணியாளர்கள் விரும்பிய இடத்தில் நீண்டகாலம் பணிபுரிய ஏதுவாக மாறுதல் பெறுவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தக்கூடாது என்பதும் மாவட்ட பதிவாளர்கள்/டிஐஜிக்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறைகளை சம்பந்தப்பட்ட டிஐஜிக்கள், மாவட்ட பதிவாளர்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : DIGs ,IG , DIGs who engage , fraud, IG , hired,15 days
× RELATED அதிமுக ஆட்சியில் போலி அனுமதி எண்...