ஜெயலலிதா பற்றிய படம் தொடர் எடுக்க தடையில்லை : தீபா வழக்கை முடித்துவைத்து ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்துக்கும், குயின் என்ற இணையதள தொடருக்கும் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் “தலைவி” என்ற தமிழ் படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் “குயின்” என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றார். இந்நிலையில், தன் அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகியவற்றை தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ.தீபா உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீபாசார்பில் வக்கீல் தியாகேஸ்வரன், விஜய் சார்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன், கவுதம் வாசுதேவ் மேனன் சார்பில் மூத்த வக்கீல் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நேற்று தீர்ப்பளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மனுதாரர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருங்கிய உறவினர் என்றும் ஜெயலலிதாவின் மகளோ அல்லது குடும்ப உறுப்பினரோ இல்லை என்றும் பட தயாரிப்பாளர்கள் சார்பில் வாதிடப்பட்டுள்ளது. இது ஒரு கதையை தழுவி கற்பனை வடிவில் எடுக்கப்பட்ட படம் மற்றும் சீரியல்தான் என்றும் யாரையும் புண்படுத்தும் வகையில் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் மனுதாரரை தொடர்புபடுத்தும் காட்சிகள் இடம்பெறவில்லை என்றும் சீரியல் தொடங்குவதற்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு தடை விதிக்க முடியாது. எனவே, இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: