வீட்டில் குவியல் குவியலாக வைத்திருந்தபோது ராக்கெட் லாஞ்சர் தெருவில் வெடித்தது எப்படி? : வியாபாரியிடம் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னை: அனுமந்தபுரத்தில் ஏற்கனவே உயிரிழப்பு நடந்ததால் பீதி அடைந்து, வீட்டில் குவித்து வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களை பயிற்சி மையத்தில் போட பைக்கில் எடுத்துச்சென்றபோது கீழே விழுந்து வெடித்தது வியாபாரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுரத்தில் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையம் கடந்த 20 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு, ராணுவத்தினர், ரயில்வே துறை, தமிழக காவல் துறை உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின்போது பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் உதிரி பாகங்கள் அனுமந்தபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே விழுந்து கிடக்கும். இந்நிலையில், கடந்த 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை துப்பாக்கி பயிற்சி நடந்தது. சில தினங்களுக்கு முன்  மதியவேளையில் அனுமந்தபுரம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (47), வெடிக்காத ஒரு வெடிபொருளை பைக்கில் எடுத்துக்கொண்டு புளியந்தோப்பு தெரு வழியாக சென்றபோது, கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் ராமகிருஷ்ணனுக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் வீட்டின் வாசலில் துணிகளை இஸ்திரி செய்து கொண்டிருந்த கோவிந்தம்மாள் (60) என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் ஓட்டு வீடு, மின்கம்பம் சேதமானது. சிமென்ட் ரோட்டில் விரிசல் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த கோவிந்தம்மாள், சென்னை அரசு மருத்துவமனையிலும், ராமகிருஷ்ணன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து ராமகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு, குவியல் குவியலாக ராக்கெட் லாஞ்சர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளை கைப்பற்றி, வண்டலூர் அருகே முருகமங்கலத்தில் உள்ள வெடிகுண்டு கிடங்கில் வைத்துள்ளனர். அவைகளை செயலிழக்க வைக்க நேற்று முன்தினம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். அனுமதி பெற்றவுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்கப்படும். கமாண்டோ போலீசாரும், வெடிக்காத குண்டுகள் ஏதாவது உள்ளதா என்று சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், பித்தளைகளை வாங்கிய காயலான் கடைக்காரர் யார், அவர் யாரிடம் இதை விற்றார் எனவும், வேறு யாருக்கேனும் இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ராக்கெட் லாஞ்சர் எந்த ரகம் என்பதை அறிய மீனம்பாக்கம் ராணுவ பயிற்சி அதிகாரிகள் வந்து சோதனையிட உள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ணனிடம் மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம், எஸ்ஐக்கள் சசிகுமார், ஜோதி விசாரணை நடத்தினர். அப்போது வெளி வந்த திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:

அனுமந்தபுரம் ராணுவ துப்பாக்கி பயிற்சி மையத்தில் ராணுவ வீரர்கள், போலீசார் பயிற்சியில் ஈடுபடும்போது, ராமகிருஷ்ணன், தர்பூசணி விற்க சென்றுள்ளார். அந்த நேரங்களில் வெடிக்காத குண்டுகளை பொறுக்கி எடுத்து பைக்கில் வைத்து வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். பின்னர் அவைகளை பிரித்து அதிலுள்ள பித்தளைகளை காயலான் கடையில் எடைக்கு போட்டுள்ளார். இதில் அதிகளவில் பணம் கிடைத்துள்ளது. ராக்கெட் லாஞ்சரில் கிலோ கணக்கில் பித்தளை கிடைக்கும் என்பதால், கடந்த 15 வருடமாக இதுபோன்று செய்து வந்துள்ளார். தற்போது, இரும்பு கடைக்காரர் குறைவான விலைக்கு பித்தளைகளை கேட்டதால், விற்காமல் வீட்டிலேயே சேமித்து வைத்துள்ளார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் மானாம்பதியில் வயல்வெளியில் கிடந்த ஒரு ராக்கெட் லாஞ்சர் வெடித்த விவகாரத்தில் 2 பேர் இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் ராமகிருஷ்ணனுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினரும் எச்சரித்துள்ளனர். எனவே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர்களை பயிற்சி மையத்திலேயே போட்டு விடலாம் என்று முடிவு செய்துள்ளார். மொத்தமாக கொண்டு சென்றால் சிக்கிக்கொள்வோம் என்ற எண்ணத்தில் தினமும் 2 லாஞ்சரை பைக்கில் எடுத்துச்சென்று போட்டு வந்துள்ளார். அதன்படி, இரண்டு தினங்களுக்கு முன் பைக்கில் எடுத்து செல்லும்போது, இந்திரா காந்தி சாலையில் மாடு குறுக்கே பாய்ந்துள்ளது. பிரேக் போட்டபோது, ேகாணியில் கட்டி வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர் கீழே விழுந்து வெடித்துள்ளது. இதில் ராமகிருஷ்ணன் மற்றும் கோவிந்தமாளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘துப்பாக்கி பயிற்சி மேற்கொள்ளும்போது, வன விலங்குகள், வீட்டு விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. எங்களுக்கு எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. கிராமங்கள் நிறைந்த பகுதியில் உள்ள இந்த பயிற்சி மையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’’ என்றனர்.

அனுமந்தபுரம் கிராமமே சிதறியிருக்கும்

பயிற்சி மையம் அருகே அனுமந்தபுரம் கிராமம், காலனி, தர்காஸ், அஞ்சூர், கொண்டமங்கலம், கருநீலம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 10 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. ராமகிருஷ்ணன் வீட்டில் சேர்த்து வைத்த ராக்கெட் லாஞ்சர்களை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி மையத்திலேயே கொண்டு போட முடிவு செய்துள்ளார். அவரது வீட்டில் குவியல் குவியலாக வைத்திருந்த ராக்கெட் லாஞ்சர் மட்டும் வெடித்திருந்தால் அனுமந்தபுரம் கிராமமே சிதறியிருக்கும்.

Related Stories: