சேப்பாக்கம் மைதானம்: குத்தகை காலம் நீட்டிப்பு

சென்னை: சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தின் குத்தகை காலத்தை 21 ஆண்டுகளுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தை   தமிழக அரசிடமிருந்து குத்தகைக்கு  எடுத்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) பயன்படுத்தி வருகிறது.  இதன் மொத்த பரப்பு 17 ஏக்கர். இதில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான  எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கம், டிஎன்சிஏ கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்  ஆகியவை செயல்படுகின்றன. இந்நிலையில்  குத்ததை  தொகை அதிகரிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கும், கிரிக்கெட் சங்கத்துக்கும் இடையே  பிரச்னை ஏற்பட்டது. அதனால் 1995ம் ஆண்டு குத்ததை காலம் 5 ஆண்டுகளுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டது. மேலும் இந்த பிரச்னை தொடர்பாக வழக்குகளும் நடந்தன.

இதற்கிடையில்  மைதானத்தில்  பழைய அரங்கை இடித்து விட்டு புதிய அரங்கம் கட்டப்பட்டது. அதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்று பிரச்னை எழுந்தது. அதனால் புதிதாக கட்டப்பட்ட ஐ, ஜே, கே அரங்குகள் மட்டும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பிரச்னையை தீர்க்க தமிழக அரசு 3 நபர் குழுவை ஆகஸ்ட் மாதம்  அமைத்தது. அந்த குழு தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்  தமிழக அரசு, ‘ சேப்பாக்கம் மைதானத்தின் குத்ததை காலத்தை 21 ஆண்டுகளுக்கு நீட்டித்து’  நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரூபா குருநாத், கவுரவ செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி ஆகியோர் நன்றி தெரிவிததுள்ளனர்.  

இந்த நீட்டிப்பு மூலம்  ஐ, ஜே, கே அரங்குகளும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். வாடகை எவ்வளவு: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் கீழ் உள்ள சிதம்பரம் விளையாட்டு அரங்கத்துக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்  அல்லது ஆண்டு வருவாயில் 5 சதவீதம் இதில் எது அதிகமோ அதனை வாடகையாக செலுத்த வேண்டும்.   இது தவிர  டிஎன்சிஏ கிளப்,  மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் ஆகியவை தனியாக  வாடகை  செலுத்த வேண்டும்.

Related Stories: