×

இங்கிலாந்து பொதுத்தேர்தல் வாக்குப்பதிவில் விறுவிறுப்பு இன்று வாக்கு எண்ணிக்கை

லண்டன்: இங்கிலாந்தில் நாடாளுமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது.   இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு கடந்த அக்டோபர் 31ம் தேதி முடிந்தது. அப்போது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்பிரதமர் போரிஸ் ஜான்சன் தாக்கல் செய்த பிரெக்சிட் மசோதா தோல்வியடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை ஐரோப்பிய யூனியன் ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது. இதுவே, இங்கிலாந்துக்கு வழங்கப்பட்ட கடைசி வாய்ப்பாக கருதப்படுகிறது.

இதனால், இந்த மசோதாவை பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நோக்கத்தில், நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிதாக தேர்தல் நடத்த முடிவு செய்தார். அதன்படி, நேற்று நடந்தது.காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக பொதுத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில 326 எம்பி.க்களுடன் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பிறகட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் ஆட்சி அமைக்கலாம்.

இந்த தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெரேமி கார்பைன் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கன்சர்வேடிவ் கட்சி 339 தொகுதிகளையும், தொழிலாளர் கட்சி 231 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் போரிஸ் ஜான்சன் கட்சி சிறிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்றும், இதனால் தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை வரும் ஜனவரி 31ல் போரிஸ் நிறைவேற்றுவார் என நம்பப்படுகிறது.

Tags : UK General Election ,UK , UK, the general election ballot, today, ballot count
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது