சானமாவு பகுதியில் முகாமிட்ட யானைகள் கூட்டம் விரட்டியடிப்பு

ஓசூர்: கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக  30 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்நிலையில், தேன்கனிக்கோட்டை,  ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் இருந்து 70க்கும் மேற்பட்ட யானைகள்  கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓசூர் வனப்பகுதிக்கு வந்தன. இதனால்  சானமாவு வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு  அங்குள்ள கிராம பகுதிக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.  இந்நிலையில், யானைகள்  சேதப்படுத்தியது போக, மீதமுள்ள நெல், ராகி பயிர்களை விவசாயிகள்  அறுவடை செய்ய துவங்கினர். மீண்டும் யானைகள் வராமல் இருக்க உடனடியாக  தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்  என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதன்பேரில்  வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 50க்கும் மேற்பட்ட வனஊழியர்கள்,  சானமாவு வனப்பகுதிக்கு வந்து யானைகள் இருக்கும் இடத்திற்கு சென்று  தாரை, தப்பட்டை அடித்தும், ஆங்காங்கே பட்டாசுகள்  வெடித்தும் விரட்ட தொடங்கினர். இதில் 60க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையை கடந்து, பென்னிக்கல்  வழியாக ஊடேதுர்க்கம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு சென்றன.  மேலும், 40க்கும் மேற்பட்ட யானைகள் மட்டும் சினிகிரிப்பள்ளி வரை  சென்று மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கே திரும்பி வந்துவிட்டன. அவையும்  இன்று மாலைக்குள் விரட்டியடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: