பட்டாசு தொடர்பான வழக்கு பிப்ரவரி 19ம்தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், பட்டாசு தொடர்பான வழக்கை வரும் பிப்ரவரி 19ம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நேற்று தெரிவித்தது. நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. குறிப்பாக, பேரியம் என்ற மூலப்பொருள் இல்லாமல் பசுமை பட்டாசை தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து, பேரியம் ரசாயனம் இல்லாமல் பட்டாசு தயாரிக்கவே முடியாது என பெசோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகளை கடந்த அகடோபர் 5ம் தேதி மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் டெல்லியில் அறிமுகம் செய்து வைத்தார்.

அதனால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமை பட்டாசு விற்பனை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாட்டு வரையறை தொடர்பான அமைப்பை உருவாக்க வேண்டும் என கடந்த மாதம் 26ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பில் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை வரும் பிப்ரவரி 19ம் தேதி பட்டியலிட்டு விசாரிப்பதாக நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: