அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 12 கிமீ ஊடுருவல்?: முகாமை காலி செய்த இந்திய வீரர்கள்

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் 12 கி.மீ. தொலைவு  ஊடுருவியதாக பாஜ மூத்த தலைவர் தபீர் காவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றான திபாங்கில் அன்ரெல்லா பள்ளத்தாக்கு பகுதிக்கு உட்பட்ட இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் 12 கி.மீ ஊடுருவி வந்துள்ளதாக தபீர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அவர்கள் ஊடுருவி இருக்க கூடும் என்று அவர் கூறினார். இதைத் தொடர்ந்து தபீர் காட்டிய புகைப்படங்கள், வீடியோவில், `திபாங் மாவட்டத்தின் கடைசி எல்லைப் பகுதியான அன்ரெல்லா பள்ளத்தாக்கு வனப்பகுதியில் சீனாவின் எல்லைப் பகுதி என்ற பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் சீன கொடியுடன் நின்றிருந்த சீன ராணுவத்தினர்,

இந்திய வீரர்களை அங்கிருந்து செல்லும்படி கூறுவதாகவும், இதையடுத்து இந்திய ராணுவம் அங்கு அமைக்கப்பட்டிருந்த முகாமை காலி செய்வதும் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ``எல்லைகளை சரியாக வரையறுக்காவிட்டால், இது போன்ற சம்பவத்தை நாம் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும். கடந்த 2016 முதல் 2018 வரையிலான கால கட்டத்தில் இந்திய எல்லைக்குள் சீனா 1,025 முறை அத்துமீறி நுழைந்துள்ளது,’’ என்றார். முன்னதாக, கடந்த செப்டம்பர் மாதம் அருணாச்சலப் பிரதேசத்தின் அன்ஜாவ் மாவட்டத்தில் சீன ராணுவத்தினர் மரப்பாலம் அமைப்பதாக தபீர் காவ் கூறியிருந்தார். ஆனால், ராணுவம் அந்த புகாரை மறுத்தது.

Related Stories: