3வது மாதமாக தொடரும் அவலம்: தொழில் துறை உற்பத்தி கடும் சரிவு: n பண வீக்கம் கிடுகிடு உயர்வு: ரிசர்வ் வங்கி இலக்கை தாண்டியது

புதுடெல்லி: பொருளாதாரம் அதலபாதாளத்தில் சரிந்துள்ள நிலையில், தொடர்ந்து 3வது மாதமாக தொழில்துறை உற்பத்தி சரிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பரில், சில்லரை விலை பண வீக்கம் 3 ஆண்டுகளில் இல்லாத அளவாக 5.54  சதவீதத்தை எட்டியுள்ளது. வெங்காயம் உட்பட உணவு பொருட்கள் விலை உயர்வுதான்  இதற்கு முக்கிய காரணம். அக்டோபரில் இந்த பண வீக்கம் 4.62 சதவீதமாகவும்,  கடந்த ஆண்டு நவம்பரில் 2.33 சதவீதமாகவும் உள்ளது என மத்திய புள்ளியியல்  துறை தெரிவித்துள்ளது. உணவு பொருள் பண வீக்கம் 10.01 சதவீதமாக  உயர்ந்துள்ளது. அக்டோபரில் இது 7.89 சதவீதமாகவும், கடந்த ஆண்டு -2.61  சதவீதமாகவும் இருந்தது. இதற்கு முன்பு 2016 ஜூலையில் பண வீக்கம் 6.07%ஆக  இருந்ததே அதிகபட்ச அளவாக இருந்தது. பண வீக்கம் 4 சதவீதத்துக்குள்தான்  இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுபோல், தொழில்துறை உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது. மின் உற்பத்தி, சுரங்கம், தொழில்துறைகளில் உற்பத்தி சரிந்ததால், கடந்த அக்டோபர் மாத உற்பத்தி புள்ளி 3.8 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் உற்பத்தி 8.2% உயர்ந்திருந்த நிலையில், இந்த பின்னடைவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஜூலை மாதத்தில் உற்பத்தி 4.9 சதவீதம் உயர்ந்தது. அதன்பிறகு ஆகஸ்ட்டில் 1.4%, செப்டம்பரில் 4.3% சரிந்தது. தொடர்ந்து 3வது மாதமாக அக்டோபரிலும் உற்பத்தி 3.8% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபரில் இது 8.4%ஆக இருந்தது.

தொழில்துறைகளின் உற்பத்தி 2.1%, மின் உற்பத்தி 12.2%, சுரங்கங்களில் உற்பத்தி 8% சரிந்துள்ளது. மூலப்பொருட்கள் உற்பத்தி 21.9%, நுகர்வோர் பொருட்கள் 18% சரிந்துள்ளது. தொழில்துறைகளில் குறிப்பாக கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் உற்பத்தி 31.3%, மோட்டார் வாகன உற்பத்தி 27.9% சரிந்துள்ளது. பொருளாதார சரிவில் இருந்து மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக கூறிவந்தாலும், தொடர் பின்னடைவு பொருளாதார நிபுணர்களிடையே கடும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: