அணைக்கட்டு அருகே குருமலையில் மலைப்பாதையில் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண்: சாலை, மருத்துவ வசதி இல்லாத அவலம்

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா சிவநாதபுரம் மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கிமீ. தூரத்தில் குருமலை, நச்சுமேடு, வெள்ளக்கல் மலை என 3 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த மலைக்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. மேலும் அங்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இப்பிரச்னைகளை தீர்க்க பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக தற்போது சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertising
Advertising

இந்நிலையில் குருமலையில் வசிப்பவர் கார்த்தி. இவரது மனைவி த்ருதி(19). நிறை மாத கர்ப்பிணியான இவர் கடந்த 2 நாட்களாக பிரசவ வலியால் அவதிப்பட்டுள்ளார். வழக்கம்போல் தங்கள் வழக்கப்படி அங்குள்ள மக்கள் சிகிச்சை அளித்தும் பிரசவம் ஆகவில்லை. இதனால் அவரை நேற்று டோலி கட்டி மலையிலிருந்து கீழே தூக்கி வந்தனர்.  பாதி வழியில் வந்தபோது, ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆம்பூலன்சுடன் வட்டார மருத்துவ அலுவலர் சசிகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மலைப்பாதையிலேயே த்ருதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து தாயையும், சேயையும் மருத்துவக்குழுவினர் ஆம்புலன்ஸில் ஏற்றி ஊசூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எவ்வளவு வளர்ச்சி பெற்றிருந்தாலும் இதுபோன்ற மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களை அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் சரியாக கண்டுகொள்வது இல்லை. எனவே கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரில் சென்று அவர்களது குறைகளை தீர்க்க வேண்டும் என்பதே அனைத்து மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: