நாகர்கோவில் அருகே பரபரப்பு: புத்தேரியில் நள்ளிரவு புலி நடமாட்டம்.... வனத்துறையினர் அதிரடி ஆய்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுத்தை வந்து, ஆட்டை அடித்து கொன்று தூக்கி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது அந்தபகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. எனவே வனத்துறை கொடிய வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில், நாகர்கோவிலை அடுத்த புத்தேரி பராசக்தி கார்டனை ஒட்டி உள்ள பகுதியில் புலி நடமாட்டம் இருந்ததாக தகவல் பரவியது. இதனை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பார்த்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்து அந்த நபர் கூறியதாவது: நேற்று நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் நாய்கள் சத்தம் அதிகமாக கேட்டு கொண்டிருந்தது. இதையடுத்து நான் வெளியே வந்து பார்த்தேன். அப்போது பராசக்தி கார்டன் கோயில் அமைந்துள்ள பகுதியில் புலி வந்து ஓடியது. பின்னர் வீட்டின் கேட்டை பூட்டி கொண்டு உள்ளே அமர்ந்துவிட்டேன் என்றார். புலி ஊருக்குள் வந்த தகவலால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சமடைந்தனர். எனவே புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அந்த  பகுதியில் இன்று காலை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரல்வாய்மொழி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதியில் புலிகள் நடமாட்டம் இருந்து வந்ததால், அந்த புலிகள் ஏதேனும் புத்தேரி ஊருக்குள் இறங்கியதா? என சந்தேகம் வனத்துறைக்கு எழுந்துள்ளது. தொடர்ந்து புத்தேரி பகுதியில் புலியின் கால்தடம் பதிந்துள்ளதா? எச்சம் ஏதேனும் காணப்படுகிறதா? என்று தீவிரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Related Stories: