திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவாக அண்ணாமலையார் இன்று கிரிவலம் வந்தார். வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகாதீப பெருவிழா கடந்த 1ம்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையொட்டி அன்று மாலை 6 மணியளவில் அண்ணாமலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு காட்சி தருவது வழக்கம். அதன்படி 2வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் சிவாலய தீபம் ஏற்றப்பட்டது. அப்போது கோயில் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மலை மீது காட்சியளித்த மகாதீபத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

இந்நிலையில் தீபத்திருவிழா நிறைவடைந்ததும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி, சுவாமி கிரிவலம் இன்று அதிகாலை நடந்தது. இதையொட்டி இன்று காலை கோயிலில் நடை திறக்கப்பட்டு மூலவர் அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்தி அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் மேளதாளம் முழங்க கிரிவல புறப்பாடு நடந்தது. அண்ணாமலையாருடன், உண்ணாமுலையம்மனும், துர்கையம்மனும் கிரிவலம் சென்றனர்.

கிரிவலப்பாதையின் வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு கற்பூர ஆரத்தி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் அஷ்டலிங்க கோயில்களிலும், அடி அண்ணாமலை கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. மகா தீபம் மலை மீது காட்சி தரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இன்றும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, வரும் 20ம் தேதி வரை அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் பவுர்ணமியொட்டி ஏராளமான பக்தர்கள் விடியவிடிய கிரிவலம் வந்தனர். இன்றும் பவுர்ணமி தொடர்வதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களின் வசதிக்காக வேலூர், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. எஸ்பி சிபி சக்கரவர்த்தி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஆண்டுக்கு 2 முறை வழக்கமாக அண்ணாமலையார் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே கிரிவலம் வருவது வழக்கம். அதாவது, தீப திருவிழாவுக்கு பிறகும், தைப்பொங்கலையொட்டி மாட்டு பொங்கலன்று திருவூடல் நடக்கும். இதையடுத்து மறுநாள் காணும் பொங்கலன்றும் சுவாமி கிரிவலம் வருவார்.

தெப்ப உற்சவம்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிச.1 முதல் 10ம்தேதி வரை என 10 நாட்கள் நடந்தது. நேற்றுமுன்தினம் மகாதீபம் ஏற்றப்பட்டது. தீபத்திருவிழா உற்சவம் முடிந்ததும், 3 நாட்கள் ஐயங்குளத்தில் தெப்ப உற்சவம் நடப்பது வழக்கம். அதன்படி முதல் நாளான நேற்றிரவு அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குளத்தைச் சுற்றிலும் மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை காரணமாக, குளத்துக்குள் பக்தர்கள் இறங்க அனுமதிக்கவில்லை. குளத்தை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். இன்றிரவு 2ம் நாள் தெப்ப உற்சவத்தில் பராசக்தி அம்மன் உற்சவமும், நாளை சுப்பிரமணியர் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

Related Stories: