தட்டுப்பாட்டை போக்க கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி: கூடுதலாக 12660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  நாட்டின் வெங்காய தேவையை மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களே பெருமளவு பூர்த்தி செய்து வருகின்றன. நடப்பாண்டு அதிகளவில் மழை பெய்ததால் பயிரிடப்பட்டிருந்த வெங்காய பயிர்கள் அழுகி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. இதன்விளைவாக நாடெங்கிலும் வெங்காயத்தின் விலை மள மளவென உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயத்தின் விலை 100 ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெங்காயத்தை குறைந்த அளவே சமையலுக்கு பயன்படுத்தினர். அதேபோல உணவகங்கள் மற்றும் ஓட்டல்களில் வெங்காயத்திற்கு மாற்றாக காய்கறிகளை பயன்படுத்த துவங்கினர்.

வெங்காய விலை உயர்வை கண்டித்து நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு எகிப்து நாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்தது. கடந்த வாரம் 40 ஆயிரம் டன் வெங்காயம் மும்பை துறைமுகத்திற்கு வந்தது. அதே போல  எகிப்து நாட்டில்  இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம், கப்பல் மூலம்  குளிர்சாதன  கண்டெய்னர்களில் அடைக்கப்பட்டு மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு  கொண்டுவரப்பட்டது. இந்த வெங்காயம் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், கூடுதலாக 12,660 மெட்ரிக் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இது டிச.,27-ம் தேதி முதல் இந்தியாவில் இறக்குமதி ஆகும். இதன் மூலம் இதுவரை மொத்த இறக்குமதி, சுமார் 30 ஆயிரம் மெட்ரிக் டன்னை தொடுகின்றன. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதத்தில் வெங்காய பதுக்கலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காய இருப்பு கட்டுப்பாடு போன்ற நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: