குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது: முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் வெளியேறி, இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் வகையில், 1955ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 9ம் தேதி வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேறியது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பாஜ கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் மசோதா எளிதாக நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இம்மசோதா மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.  இதனை தொடர்ந்து மசோதாவை நிறைவேற்றுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்த்து 105 ஓட்டுகளும் பதிவாகின. சிவசேனா கட்சி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதனால், மசோதா நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பல அமைப்புகள் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் இருக்கும் இலங்கை தமிழ் அகதிகளின் நிலை என்ன ஆகும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் இருக்கும் எல்லா இந்தியர்களுக்கும் குடியுரிமையை அடிப்படை உரிமை என்று இந்திய சட்டம் கூறுகிறது. மதம், சாதி , மொழி , கலாச்சாரம், பாலினம் கடந்து இந்திய மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை உடைக்கும் அளவிற்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

மத ரீதியாக மக்களை பிரிக்கும் வகையில், மத ரீதியாக குடியுரிமை வழங்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும், சட்டத்திற்கும் முழுக்க முழுக்க எதிரானது என கூறியுள்ளார். இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கேரள அரசு அமல்படுத்தாது என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Related Stories: