இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளது: தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை

டெல்லி: இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 2015 முதல் 2017ம் ஆண்டுகள் வரை குற்றச்சம்பவங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்து தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் எண்ணிக்கையில் சராசரியாக 4,976 வன்கொடுமை சம்பவங்களுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் 1,870 குற்றங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

1,706 சம்பவங்களுடன் சத்தீஸ்கர் மாநிலம் 3-வது இடத்திலும், 78 சம்பவங்களுடன் அருணாச்சல பிரதேசம் நான்காம் இடத்திலும், சிக்கிம் மாநிலம் 40 சம்பவங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக கூறியுள்ளது. அதேபோல மாநிலங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி பார்க்கையில், தலைநகர் டெல்லி 19.1 சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. 12.1 சதவீதத்தில் மத்திய பிரதேசம் இரண்டாம் இடத்திலும், 13.0 சதவீதத்தில் சத்தீஸ்கர் மூன்றாம் இடத்திலும், 12.9 சதவீதத்தில் சிக்கிம் மாநிலம் நான்காம் இடத்திலும், 12.4 சதவீதத்துடன் அருணாச்சல பிரதேசம் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

மேலும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறைவாக நிகழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு கால கட்டத்தில் 342 பெண்கள் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு உள்ளானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 6 பெண்களும், நாகாலாந்தில் 24 பெண்களும், குஜராத்தில் 657 பெண்களும், பீகாரில் 888 பெண்களும் பாதிப்புக்குள்ளானதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், மாநிலங்களில் உள்ள பெண்களின் எண்ணிக்கை விகிதாச்சாரப்படி, குறைவான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதில் புதுச்சேரி 0.8 சதவீதத்துடன் முதலிடத்திலும், தமிழகம் 1.0 சதவீதத்துடன் இரண்டாமிடத்திலும், 1.7 சதவீதத்துடன் பீகார் மூன்றாம் இடத்திலும், 2.1 சதவீதத்துடன் நாகாலாந்து நான்காம் இடத்திலும், 2.2 சதவீதத்துடன் குஜராத் ஐந்தாம் இடத்திலும் உள்ளதாக கூறியுள்ளது.

மக்கள் தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால், மிகக் குறைவாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெற்று, பட்டியலில் மோசமான இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலம் 40 வழக்குகளுடன் சற்று குறைவான பாலியல் சம்பவங்களை கொண்டிருந்தாலும், மக்கள் தொகை அடிப்படையில் சிக்கிம் சிறிய மாநிலம்; இருப்பினும் அங்கு அதிக அளவில் பாலியல் குற்றங்கள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட மற்றோரு ஆய்வில்; பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்துள்ள நாடுகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. மற்றொரு ஆய்வில் 2010ம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் அடிப்படையில் நேஷன் மாஸ்டர்  வெளியிட்டுள்ள இந்த ஆய்வில், இந்தியா 94வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: